தீராவெளி

Wednesday, July 26, 2017

முஸ்டீன்----தமிழ் மிரர்-21.12.2016









தமிழ் மிரர்-- 21.12.2016
நேர்கண்டவர் -- முஸ்டீன்
--------------------
படைப்பது என் ஆன்மீகப் பணி
தீரன் ஆர் எம் நௌஷாத்


அமைதியாக இருந்தே கனதியான படைப்புகளைத் தருகின்றீர்கள். உங்கள் படைப்புலகம் பற்றிச் சொல்லுங்கள்?


அமைதியாக இருக்கவில்லை ...அகப்போராட்டத்தில் இருக்கிறேன்... ஒரு கணத்தில் மின்னி மனதில் வீழ்படிகின்ற கருவைப் படைப்பதில் எத்தனையோ விசயங்களை நான் யோசிக்கின்றேன். பாத்திர வார்ப்பு,கதா மாந்தர், நிகழ்தளம் யாதர்த்தப் பூச்சு, மொழிநடை, உரையாடல் என்றெல்லாம் படைப்பின் முன்னுள்ள நிலை குழப்பமானது. எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு உருவாக்கிய படைப்புரு என்னை இலேசில் திருப்திப்படுத்துவதில்லை. மீண்டும்,, செவ்விதாக்கல் என்ற செதுக்கும் தொழிற்சாலையிலிட்டு (அது எத்தனை நாளாகுமோ தெரியாது) கடைச்சல் வேலை செய்கின்றேன். அது ஒரு தனிக்கலை. இதுதான் என் படைப்புலகம் ... உண்மையில் என் படைப்புலகம் ஒரு இருள். படைப்புத் திறமை ஒரு அருள். அது எல்லோருக்கும் அருளப்படுவது கிடையாது.


01. சிறந்த சிறுகதைகள் தருபவராக உங்களைப் பார்க்கின்றோம். உங்கள் கதைப்புலம்குறித்துச் சொல்லுங்கள்?


‘’சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எந்த இலக்கணத்தையும் மனத்தில் நினைத்துக் கொண்டு எழுதுவதில்லை. அவர்கள் எழுத்துகள் தாமாகவே சிறுகதை வடிவம் பெற்றுவிடுகின்றன’’. என்கிறார் சுசீந்திரன்... ஆனால் நான் ஒரு கதைத்தந்திரம் வைத்திருக்கிறேன்... அதாவது முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்;கிறேன். அப்புறம் அவர் என்னை வாங்காமல் போக முடியாதபடி செய்து விடுவது.. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே விதமாக ~கதை|த்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.;. ''.. சிறுகதை குதிரைப் பந்தயம்போல தொடக்கமும் முடிவும் சுவை மிக்கதாக இருக்க வேண்டுமென்று எல்லரி செட்ஜ்விக் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.’’ என இணையத்தளமொன்றில் காணக் கிடைத்தது.. ஆயின் இப்போது இந்த இலக்கணங்களை எல்லாம் தாண்டி சிறுகதை எங்கோ போய்விட்டது... இக்காலத்தில் கூட என்னால் இன்னும் வெகுசுதந்திரமாக எழுத முடியவில்லை என்றே விசனிக்கிறேன்


02. வெள்ளிவிரல் தொகுதி ஒரே மூச்சில் படித்துமுடிக்க வைக்கின்றது, சிறுகதைகள் பற்றிய தங்களின் அபிப்ராயம் என்ன,

ஊரில் பழைய சந்தை வீதியில் இருந்து கொண்டு செவ்வாய்க் கிரகத்தில் சஞ்சரிப்பதும் ... பிச்சைக்காரனின் அழுக்குச் சட்டைக்குள் சில்லறை காசாகக் கிடப்பதும் சிறுகதை தரும் விசித்திரமான அனுபவங்கள்தாம்..ஒரு வினாடிக் காலமும் ஒரு சிறுகதையாகலாம் ,,ஒரு ஆயுள்காலம் முழுக்கவும் ஒரு சிறுகதையாகலாம். காலங்களை கடந்து சஞ்சரிப்பது சிறுகதை.. மாபெரிய மகாபாரதக் கதையையும் ஒரு சிறுகதை ஆக்கிவிடலாம்,,சின்னஞ் சிறிய திருக்குறளையும் சிறுகதை ஆக்கிவிடலாம்.. காலங்களாலும், அளவுகளாலும், சம்பவங்களாலும் மட்டுப்படுத்த முடியாதது சிறுகதை.. சிறுகதையின் சூட்சுமக் கயிறு எங்கே இருக்கிறது என்று சுவாரஷ்யமாக ஆராய வைப்பதே ஒரு சிறுகதையின் மர்மக் கவர்ச்சி...


‘’.... வாழ்க்கையின் ஒரு சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ,நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதாவது ஒரு அணுவின் சலனமோ சிறுகதையாக இடமுண்டு....’’ என்கிறார் சுஜாதா. அதில் நான் உடன்படுகின்றேன்


04.வாசிப்பின் பின்னரான விமர்சனக் குறிப்புகள் அல்லது ரசனைக்குறிப்புகள் பற்றிய தங்களின் அபிப்பிராயம்?

படைப்பது என் ஆன்மீகப் பணி.. விமர்சனங்கள் –எதிர்வினைகள் என்பன என் பணியை செப்பம் செய்பவை. வரவேற்போம் .... ஆயின் ஒரு படைப்பின் மீது காழ்ப்புணர்வோடு செய்யப்படும் எதிர்வாதங்களை நான் கண்டு கொள்வதில்லை.. என் ‘நட்டுமை’ நாவலை விமர்சனம் செய்த ஒரு பெருந்தகை ‘இதில் இன்னின்ன பிழை இருக்கிறது..இதை இப்படியிப்படி சொல்லியிருக்க வேண்டும்.. இதில் இது இதுவெல்லாம் காணப்படவில்லை...” என்று அடுக்கிக் கொண்டே போனார்.. எனக்கென்றால் இது ஒரு கோமாளித்தனமாகவே தென்பட்டது.. நீ சொல்வது போல் ..நீ விரும்புவது போலெல்லாம் எழுதுவதற்கு நான் ஒரு எழுதுவினைஞன் அல்லவே.....நான் ஒரு படைப்பாளி... இந்த மாதிரி இலக்கியச் சண்டித்தனம் செய்தால்....? என் படைப்பில் உன் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியாது... அன்பரே..!


05.பள்ளிமுனைக்கிரமத்தின் கதை எப்படி கொல்வதெழுதல் 90 ஆக மாறியது?

முஸ்லிம் குரலில் பள்ளிமுனைக் கிராமத்தின் கதை என்ற தலைப்பில் கொஞ்சம் அரசியல் கொஞ்சம் சமூகவியல் என்று ஒரு விவரணம் எழுதி வந்தேன்... அது முடிவடைந்த பிறகு இதை ஒரு முழு நாவலாக ஆக்கலாம் என நண்பர்கள் எம்.பௌசரும், எம்.எம். நூறுல் ஹக்கும் ஒரு ஆலோசனை சொன்னார்கள்... சரி என்று அதை அதே பெயரில் செவ்விதாக்கம் செய்யத் தொடங்கினேன்...


2013 இல்தான் ஒரு முழு நாவலாக இது சாத்தியமானது.. எல்லாம் முடிவடையும் தருணத்தில்தான் ஒரு விஷயம் தெரிய வந்தது... பள்ளிமுனை என்ற பெயரில் மன்னார் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் கிராமம் இருக்கிறது என்று... அதுவரையில் நான் இதை அறிந்திருக்கவில்லை... இக்கதை கிழக்கு முஸ்லிம் ஊர்களில் தளம் கொண்டிருப்பதால் இதே பெயரில் இக்கதை வெளியானால் இது ஒரு சிறிய மொழிவழக்கு மற்றும் கதைத்தளம் என்பவற்றில் ஒரு குழப்பத்தை தரும் என்று நண்பர் நஜீப்கான் அபிப்பிராயப்பட்டார்...


இந்நாவலை நான் என் நன்றிக்கடனாக சு.ரா. அவர்களுக்கே சமர்ப்பணம் செய்திருந்தேன்... இதை அறிந்த ஒரு மூத்த ‘’அறிஞர் பெருமகன்’’ “உன் கதை சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதையின்’ தழுவல் போல எனக் கேட்டு ஒரு நக்கல் வேறு விட்டார்..


இந்தக் குழப்ப நிலைகளின் காரணமாக இந்நாவலின் தலைப்பை நான் மாற்றத் தீர்மானித்து விட்டேன் .... அதே சமயம் இக்கதை காலச்சுவடு நிறுவனத்தினால் அச்சிடப்பட்டுக் கொண்டுமிருந்தது... நூல் இறுதிவடிவம் பெற ஒருசில நாட்களே இருந்த நிலையில் நாவலின் தலைப்பை திடீரென எப்படி மாற்ற..? என்னவென்று மாற்ற...?


ஒரு குழப்ப நிலையில் நான் “திரிந்து” கொண்டிருந்த போதுதான் என் மகள் தன் தவணைப் பரிட்சை முடிவை என்னிடம் காட்டி... வாப்பா.. எனக்கு ‘சொல்வதெழுதுதல்—90.’ ‘’ என்று சொல்லி அறிக்கையைக் காட்டினாள்... அதில் இருந்த சானா (ச ) எனக்கு கானா (க ) போல தெரிந்தது... கொல்வதெழுதல்-90... என்று வாசித்து விட்டேன்.. மகள் “கொல்‘லெனச் சிரிக்க--- எனக்குள் மூளைக்குள் பொறி தட்டி அக்கணத்தில் ‘கொல்வதெழுதுதல்—90.’ என்ற தலைப்பு உற்பத்தியாகிவிட்டது... இதன் சாத்தியப்பாடும் பொருத்தமாகவே இருந்தது... போர் உக்கிரம் பெற்றிருந்த 90 காலப்பகுதியில் ஆளையாள் கொல்வதே வாழ்க்கை என்றாகியிருந்த சூழலில்...இந் நாவலின் தளமும் 1990 காலத்தளம் என்பதால் தலைப்பு ஓரளவு பொருத்தமாகவே ஆகிவிட்டது....


06. பிரதேசத்தில் இருந்த ஆயுத அரசியலையும் ஒரளவு தொட்டதாகத்தான் கொல்வதெழுதல் 90 ஐப் பார்க்க முடிகின்றதே

ஆமாம் ...1990 கள் இலங்கையில் போர் உச்சம் பெற்றிருந்த காலம். நம் நாடு கொலைஞர்களின் கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது.. இராணுவம்..புலிகள்..ஊர்காவற்படைகள் ..இதர...ஆயுதக் குழுக்கள்..பாதாள உலகக்கோஸ்டிகள்...என்று எல்லோர் கையிலும் ஆயுதம்... ஆயுதங்களே அரசியல் ஆயின....... ஆட்கடத்தல்.. இனக்கலவரம்... கொலை.. கொள்ளை... இனக்கலவரம்.... என்று எங்கும் அராஜகம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த காலம் அது.... முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனித்துவ அரசியலின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒவ்வொரு பாமர மக்கள் வாழும் குக்கிராமங்களில் கூட உணரப்பட்ட காலம் அது ...


அந்த போர்க்கால சூழலில் போர்க்கால இலக்கியங்களே முதன்மை பெற்றிருந்தன... அப்படியான காலப் போர்வையினுள் இப்படியான படைப்புக்கள் வருவது சகஜமே... ஏனென்றால் அதுதானே அக்கால வாழ்க்கை...


07.உங்கள் சூழலில் நிகழ்ந் யுத்தகால ஆயுததாரிகளின் செயற்பாடுகள்பல நாவல் எழுதப் போதுமானவை இருந்தும் ஏன் நீங்கள் மௌனமாக இருக்கின்றீர்கள்,


மௌனமாக இருக்கவில்லை... சிறுகதைகள், கவிதைகள் மூலம் ஆயுததாரிகளின் அட்டகாசங்களை சொல்லியிருக்கிறேன்...1983 களில; நான் நடத்திய “தூது” கவிதை இதழில்.. “இன்னாலில்லாஹி...” என்ற கவிதை தொகுதியில்....’’மீசான் கட்டைகளின் மீள் எழும் பாடல் ..” தொகுப்பில்... “இரண்டாவது பக்கம்’’ இதழில்....’’ சிவந்த பள்ளிகள்’’ தொகுப்பில்.... எத்தனையோ கவிதைகள் எழுதியிருக்கிறேன்... அஷ்-ஷூரா, ஈழநாதம், அல் ஜஸீரா,சரிநிகர் மற்றும் சில சிற்றேடுகளில் இந்த விடயத்தை கருவாய்க் கொண்டு பல சிறுகதைகள்-கவிதைகள் எழுதியிருக்கிறேன்... ‘’கொல்வதெழுதல் 90இல்....சில விடயங்களை சொல்லியிருக்கிறேன்... சாய்ந்தமருது பொதுச் சந்தை குண்டு வெடிப்பு பற்றி தனி ஒரு நாவலே எழுதியிருக்கிறேன்...அது பிரசுரம் பெறாது கைப்பிரதியாக இருக்கிறது....


08. ஒரு தபாலதிபரின் இலக்கியஉலகு பற்றி எமக்குத் தெரியாத பல பக்கங்கள் இருக்குமே?


இருக்காதா பின்னே..? பெற்ற மக்களால் கைவிடப்பட்டு பிச்சைச் சம்பளம் பெற வரும் தாய்மார்கள்... கவனிப்பாரின்றி வார்ட்டுகளில் கிடந்தது நோய் நிவாரணப் பணம் பெற வரும் நோயாளிகள்... தள்ளாத வயதில் உதவுவாரின்றி தன்னந்தனியே வீதிகளில் அல்லாடி வரும் பென்சன்காரர்கள்... தான் சாப்பிடாவிட்டாலும் மகனுக்கு பசிக்கும் என்று சொல்லி தான் பிச்சை எடுத்த காசை அனுப்ப வரும் பாமர ஏழைகள்,,,,

யார் எக்கேடு கேட்டுப் போனாலும் தன் சிபார்சை –ஆணையை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தும் அரசியல்காரர்கள்... நேற்றைய நேர்முகப் பரீட்சைக்கு இன்று கடிதம் கேட்டு வரும் இளைஞர்கள்... தன காதலியின் கடிதத்தை பெற்றோருக்கு தெரியாமல் காதலனிடம் கொடுக்கச் சொல்லி அசட்டுச் சிரிப்புடன் வரும் விடலைகள்... எந்தக் கஷ்டம் நமக்கு இருந்தாலும் தன வேலையை முடித்துக் கொண்டு செல்லும் அவசரத்தில் வரும் வர்த்தக பிரமுகர்கள்... எத்தனை வேலைகள் இருந்தாலும் தன “வருடாந்த சோதனையை” செய்து ஆயிரம் பிழை சொல்லி எச்சரிக்கைப் பத்திரிக்கை அனுப்பும் பரிசோதகர்கள்......


ஹர்த்தால்..கடத்தல்..போக்குவரத்தின்மை...நோய்... என்ன காரணம் இருந்தாலும் தபாலகம் மட்டும் திறந்திருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் உயர் அதிகாரிகள்.. .....நெருக்கும் பொதுமக்கள்/.......அப்பப்பா...யாரிடம் கதை இல்லை....யாரிடம் கவிதை இல்லை.....?


09 விருதுகள் பட்டங்கள்....?(சம்பந்தமாக கேட்டால

சங்ககாலம் தொட்டு இலக்கியமும் விருதுகளும் தொடர்புற்றே உள்ளன.. எழுத்துக்காக வழங்கப்படும் விருதுகள் பெறுமதிமிக்கவை.. விருதுக்காக எழுதுபவை செல்லாக்காசுகள்... துரதிர்ஸ்டவசமாக இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் விருதுகளால் முதுகு சொரிந்து கொள்வதைத்தான் தினமும் பார்க்கிறோமே...
என்னிடம் சிலர் அவ்வப்போது வந்து நீங்கள் இப்பகுதியில் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர்... உங்களுக்கு எமது அமைப்பினால் ஒரு விருது வழங்கவேண்டும்.. என்று உரிய ஒரு படிவமும் தந்து வற்புறுத்துவதுண்டு... இன்னும் சில நிறுவனங்கள் இன்ன விருதுக்கு இவ்வளவு என்று பணம் கேட்கிறார்கள்.. இந்த மாதிரி ஆசாமிகளை கண்டாலே எனக்கு சிரிப்புத்தான் வருகிறது...
இதுவரையும் ஒரு விருது,, ஒரு பட்டம் நான் பெறவில்லை..விண்ணப்பிக்கவில்லை..விண்ணப்பப்படிவம் நிரப்பிக் கொடுத்ததில்லை...
என் எழுத்தைப் படிக்கும் ஒரு வாசகர் எனக்கு ‘’மனப்பூர்வமாக’’ சொல்லும் ஒரு சின்னப் பாராட்டுத்தான் எனக்குக் கிடைக்கும் விருது. அதில் நான் மகிழ்கிறேன்.. .


10. உங்ரதேசத்தில் அதிகம் கவனிப்புப் பெறாத சிறுகதை கவிதை நாவல்கள் பற்றிச் சொல்லுங்களேன்

ஒரு தரமான இலக்கியப் பிரதி அதன் சம்பூர்ண உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையில் எத்தனையோ இருட்டடிப்புக்களையும் மீறி கவனிப்புப் பெற்றேயாகும். கனதியற்றவை எத்தனை பேர் தூக்கிப் பிடித்த போதிலும் நிலைபேறாகாது.... எமது பிரதேச படைப்புக்கள் அவை படைக்கப்பட்ட அவ்வக் காலப்பகுதியில் கவனிப்புப் பெற்றவைதாம்.. அப்படி கவனிப்புப் பெறாதவை இப்போதும் பேசப்படத் தகாதது என்றாகிவிடும் போது நீங்களும் நானும் எப்படி அது பற்றி இப்போது கவனம் செலுத்துவது...?


ஒரு சில இந்த விதிக்குள் அடங்காதவையாக இருக்ககக் கூடும்.. உதாரணமாக ஆழ்மனதை துளாவும் அகப்பை கொண்டு எழுதும் எஸ். நசீறுதீன் (நச்சு வளையம்-நாவல்) அப்போதும் இப்போதும் சரியான முறையில் பேசப்படவில்லை.. இதற்குக் காரணம் நூலாசிரியர்தான். அவர் இந்நாவலை எழுதி வெளியிட்டு அதன் பெறுபேறுகள் பார்க்க முன்னரே புலம் பெயர்ந்து விட்டார். அதிகமானோர் கைகளில் அது கிடைக்கப் பெறவில்லை....

11. உங்களை ஒரு ஹாஸ்யமான மனிதராக அடையாளப்படுத்தலாமா?

என்னுடைய அடையாள அட்டையில் ராசிக் காரியப்பர் முகம்மது நவ்ஷாத் என்றுதான் இலங்கை அரசாங்கம் என்னை அடையாளப்படுத்திஇருக்கிறது...


12. இளந்தலைமுறைப் படைப்பாளிகள் குறித்த அவதானிப்பும் அபிப்ராயமும்?


இளைய தலைமுறையினருக்கு இருக்கும் வாய்ப்பு வசதிகள் எமக்குக் கிடைக்கவில்லை... விரல் நுனியில் விரியும் இணைய உலகம் அவர்களுக்கானது... என்ன இல்லை இணையத்தில்...? ஒரு படைப்புக்குத் தேவையானால் என்ன ஒரு தகவலையும் அவர்களால் இலகுவில் பெற்றுக் கொள்ள முடிகிறது... முக நூலிலும்- வலைத் தளத்திலும் எவ்வித தணிக்கையும் இன்றி உடனுக்குடன் தம் எழுத்தை அச்சில் பார்க்க முடிகிறது... இதனால் எழுத ஆரம்பித்து மூன்றே மாதங்களில் நூல் ஒன்றை பிரசவிக்க முடிகின்றது...


ஆயின்.., பலரது படைப்புகளின் தரம் பற்றி நல்லபிப்பிராயம் கொள்ள முடியவில்லை... ‘’பாஸ்ட்பூட்’’ போல எல்லா மசாக்களையும் போட்டு ஒரு கொத்து ரொட்டியாக சுடச் சுட மேசைக்கு வந்துவிடுகிறது... சாப்பிட்டு ஜீரணிக்க வேண்டியிருக்கிறது... சில அபிப்பிராயங்களை சொன்னால் “மூத்தவருக்கு பொறாமை “ என்கிறார்கள்... காது கொடுத்துக் கேட்க நேரமில்லாமல் அடுத்த ரொக்கற் தயாராகிவிடுகிறது...


என்றாலும் மேற்படி இணைய வசதிகளைப் பயன்படுத்தி வெகு அபூர்வமாக சில இளையோர் …வித்தியாசமான நல்ல படைப்புகளை தனது கொண்டிருக்கிறார்கள்... புதிய தளங்களை கட்டுகிறார்கள்...என்பதையும் மறுப்பதற்கில்லை...


13. ஓர் இலக்கியவாதி எல்லோருடனும் எத்தகைய உறவைப் பேண வேண்டும்?


‘’......நான் எப்படி வர வேண்டும் என்று எனக்குள்ளே ஒரு படத்தை வரைந்துகொண்டு அந்த மனிதனை ஆக்குவதிலே நான் ஈடுபட்டிருக்கிறேன். மனித உணர்வை மலர்வித்தல்.. மனித உறவைச் செப்பனிடல்... மனித உறவுக்கு நம்பிக்கையூட்டுதல்.. நலிந்த மனிதனுக்கு இரங்குதல்...அதற்காகப் போராடுதல் ஒரு போர்க்குணங் கொண்டவனாக....சீற்றமுள்ளவனாக வாழ விரும்புகின்றேன்.....’’ என்று நம் இலக்கிய குருநாதர் பாவலர் பஸில் காரியப்பர் சொல்வதையே நானும் வழிமொழிகிறேன்...


14. இலக்கியத்தின் பெயரால் ஏற்படும் குழப்பங்களையும் நெருக்கடிகளையும் எப்படி எதிர்கொள்ள் வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?


எந்தத் துறையையும் விட இலக்கியத் துறையில்தான் போட்டி-பொறாமை-குத்துவெட்டு-காழ்ப்புணர்வு—காவு கொடுத்தல்-பழிக்குப்பழி –கோஷ்டி மோதல்- காலை வாருதல்-தட்டிப்பணித்தல்- வெட்டிக் கிழித்தல்- கோள் காவுதல்- நக்கல் நையாண்டிகள்- முதுகில் குத்துதல் – எல்லாமே மிக மிக அதிகம்....


மேலும், இலக்கியப் பட்டியல் வியாபாரிகள் சிலர் இருக்கிறார்கள்.. பெத்தம்மா மொழியில் ஒரு சில படைப்பாளிகளையே பட்டியல் இடுவார்கள்..மேடைகளில் முழங்குவார்கள்... இதற்கு சில காரணங்கள் உண்டு.. தான் சார்ந்த ‘கோஷ்டியில்’ இருந்தால் தூக்கிப் பிடிப்பார்கள்... எதிர்க் கோஷ்டியில் இருந்தால் ‘வெட்டி’விடுவார்கள்.. மற்றது புதிய எழுத்துக்களை அவர்கள் படிப்பதில்லை... புதிதாக எழுதுவோரை தெரியாது... எதோ தான் ஒருவரை புகழ்ந்தால்தான் அல்லது பட்டியல் இட்டால்தான் அவனால் பிரபலமாக முடியும் என்று குருட்டுத் தனமாக நம்புகிறார்கள்...


எங்கள் பிரதேச எழுத்தாளர் ஒருவர் என்னுடைய ‘நட்டுமை’ நாவல் பற்றி ஒரு “கோள் “ காவிக்கொண்டு தமிழ்நாடு நாகர்கோவிலுக்கு விமானத்தில் பறந்து அந்தக் “கோளை” காலச்சுவடு ஆசிரியரிடம் மூட்டிக் கொடுத்துவிட்டு நிம்மதி கண்டார்....இன்னும் சிலர் பாட்டன் வயதிலும் கூட ‘பின்னவீனத்துவவாதிகளுடன் ‘’ சமரசம் செய்யும் கைங்கரியத்தில் இறங்கி தாமும் தம் வயது மறந்து ‘பாலியல்’ எழுதிக் கொண்டிருக்கிறார்கள்... ஹையோ...காலம் இவர்களைக் கடந்து எங்கேயோ போய் விட்டது.... ‘சேவை மூப்பு’ கிழட்டுப் பண்டாரங்களின் எழுத்துக்கள் சீண்டுவாரற்றுக் கிடக்கின்றன.... புதிய எழுத்துக்கள் புதியவர்களால் தேச எல்லைகள் கடந்து கொண்டு செல்லப்பட்டுவிட்டது..

‘’இலக்கியவாதி’’ என்ற அகந்தைக் கிரீடத்தை கழற்றி வைத்து விட்டு மானுடம் மீதான அவாவுகை –அன்பு- சகோதரத்துவம் என்ற பண்புகளை மேற்கொண்டு வாழ்தல்..அல்லது வாழ முயற்சித்தல் வேண்டும். அல்லது தீதுகளை மனதளவிலாவது வெறுத்து வாழுதல் வேண்டும்... இப்படி வாழவே நானும் முயற்சி செய்கிறேன்...


15. இலக்கியத்தில் அநாவசியமான பிரச்சினைகளைத் (unwanted problems) தவிர்த்தல் பற்றி ஐடியா கொடுக்கலாமே?

அநாவசியமான பிரச்சினைகள் என்று நீங்கள் சொன்ன பிறகு அதற்கு ஐடியா கொடுப்பதும்...அனாவசியம்தான் ..


16. தீரன் என்ற படைப்பாளியைப் பற்றி?


தீரன்- ஒரு தவிர்க்க முடியாத தலைவலி. உள்ளிருந்து ஆன்மாவை உசுப்பும் உளவாளி- விஷமிகளின் உலகத்தில் வாழத் தெரியாத ஒரு ஏமாளி—மற்றவர் பார்வையில் ஒரு சின்னக் கோமாளி...சீண்டிவிட்டால் ஒரு எழுத்துப் போராளி..


17. உங்கள் கவிதைகள் ஏன் இன்னும் தொகுப்பாகவில்லை?


2000ஆம் ஆண்டுக்குப் பின் நான் கவிதைகள் என்று அனேகமாக எழுதவில்லை... அதற்கு முன்னர் ஏதோ கொஞ்சம் எழுதிக் கொண்டிருந்தேன்... அவற்றை இப்போது பார்க்கும் போது கொஞ்சம் அசட்டுத் தனமாகக் கூட இருக்கிறது... சரிதான்... நம்முடைய அசட்டுத் தனத்தை நாமே காட்சிப்படுத்தி இப்போதைய கவிஞர்களைப் பயமுறுத்தலாகாது என்ற ஒரு நல்லெண்ணத்தில் தொகுப்பாகக முயற்சிக்கவில்லை...


எனினும் பலவருட காலமாக நான் எழுதிய குறும்பா க்கள் ஏராளமாக இருக்கின்றன.. ‘அழித்தாயே., ஆழித்தாயே..!” என்ற சுனாமி பற்றிய ஒரு காவியம் கூட உண்டு,,, இவற்றை தொகுப்பாகக் கொண்டு வர ஒரு உத்தேசம் உண்டு... பயப்படாதீர்கள்...


உங்கள் வானொலி நாடக அனுபவங்களை சொல்லுங்கள்?


வானொலியில் முஸ்லிம் சேவையில் 1985 களில் பல நாடகங்கள் எழுதியிருக்கிறேன்... ஆ..அது ஒரு பொற்காலம்.! இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு நேயர்களிடம் இருக்கும் வரவேற்பு அப்போது இலங்கை வானொலி நாடகங்களுக்கு இருந்தன..வானொலி நாடகங்களுக்காக நேயர்கள் காத்துக் கிடந்தனர்.. வானொலி நாடக குறியீட்டொலி கேட்டே தம் கைக்கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது..!


1985ல் எனது முதல் வானொலி நாடகம் ~’வாக்கு’| முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. தொடர்ந்து 1990 வரை சுமார் 12 வானொலி நாடகங்கள் கலைமாமணி எம். அஸ்ரப்கான் அவர்களின் நெறியாழ்கையில் எழுதியிருக்கின்றேன். கிழக்குப் புற நாட்டார் பாடல்களை வானொலி நாடகங்களில் கலந்து கொடுத்து சில பரீட்சார்த்தங்களை செய்து பார்த்ததுண்டு.. இவற்றில் ~’’ஒரு கிராமத்தின் கவிதை’’| சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பானது..


அகில உலக வானொலி நாடகப் போட்டியில் ~’’காகித உறவுகள்’’| நாடகத்திற்கு தினக்குரலும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து 3ம் பரிசளித்தது. தத்துவஞானி உமர்கையாமின் வாழ்வியலின் ஒரு துளியாக ஒலிபரப்பான ~’’விண்மீன் வீடு’’| என்ற நாடகத்திற்கு நேயர்கள் பொழிந்த பாராட்டுமழையில் நனைந்து இப்போதும் நினைந்து மகிழ்கிறேன்..


நடிகமணி கேஎம் ஜவாஹர்ääஞெய்ரகீம் ஸஹீத்ää ஸில்மியா ஹாதிää நூர்ஜஹான் மர்ஸ_க்ää அஸ்ரப் சிகாப்தீன்ää ஸனோஸ் முகம்மத் பெரோஸ்ää ஏ.எல்.ஜபீர்ää ஏ.ஆர்.எம். ஜிப்ரிää எம். தாஜ்ää எம்.எம்.ரவ்ப்ää ஹ_ஸைன்ää லத்தீப்ää புர்கான்பீ இப்திகார்ää என்று ஒரு கலைஞர் பட்டாளமே ~குரல் நடிக நட்சத்திரங்களாக| திகழ்ந்த காலத்தை எண்ணி வியக்கிறேன்.


ஓலிபரப்பாகிய நாடகங்களில் கைவசம் உள்ள 10 நாடகங்களின் தொகுப்பு ~’’முஸ்லிம் நிகழ்ச்சியில் அடுத்ததாக....’’| என்ற பெயரில் இறுவட்டுத் தொகுதியாக அடுத்த மாதமளவில் வெளிவருகிறது.

18. பிரதேச இலக்கியச் செயற்பாடுகள் பற்றிப் பகிரலாமே


‘’அகர ஆயுதம்’’ அமைப்பினர் பல இலக்கிய நிகழ்வுகளை காத்திரமான முறையில் முன்னெடுத்து வருகிறார்கள்... வடக்கு-கிழக்குக்கு தமிழ்-முஸ்லிம் உறவுக்கு ஒரு இலக்கியப் பாலம் அமைக்கத் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. ‘’கல்முனை பாவலர் பண்ணை’’ பல மறைந்த படைப்பாளிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளையும் அவர்களை புதிய படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்யும் ஒரு நல்ல கைங்கரியத்தை மேற்கொண்டு வருகிறார்கள்... ‘’கரவாகு இலக்கியச் சந்தி’’யினர் மாதாந்தம் பற்பல இலக்கிய கூட்டங்களை சளைக்காமல் நடத்தி இலக்கியவாதிகளின் ஒன்று கூடல்களை சாத்தியமாக்கி வருகிறார்கள்.. பட்டாம்பூச்சிகள் பரண் அமைப்பினர் பௌர்ணமி இரவுகளில் "#இலக்கிய #அவரி " என்ற பேரில் மாதாந்த கவியரங்குகளையும் இலக்கிய உரையாடல்களையும் முன்னெடுத்து செயற்படுகின்றனர்.. ‘’அபாபீல்கள் கவிதா வட்டம்’ கவியரங்குகளை நடத்தி வருகிறது... ‘’சமவெளி’’ இணையம் பல வகையான இலக்கிய செயற்பாடுகளுக்காக தன தளத்தை வழங்கிவருகிறது... இப்படி இன்னும் பல அமைப்புகள் உற்சாகமாக இலக்கியச் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது...


19. உங்கள் பால்ய கால இலக்கியச் செயற்பாடுகளுக்கும் இப்போதைய செயற்பாடுகளுக்குமான வேறுபாடுகள்?


பால்ய காலம் இலக்கிய செயற்பாடுகளுக்குரியதல்ல .... எப்படியாவது பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும் என்பதற்காக என்னவோ வெல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன்... ஒன்றும் கவைக்குதவாதவை... கதைக்குதவாதவை.. ஒரு சமயத்தில் அந்த ஆர்வம் குறைந்து விடுகிறது...


பின்னர், இடையறாத வாசிப்பு மற்றும் யோசிப்புகளின் பின்னரே சில உள்ளார்ந்த இலக்கிய வெளிச்சம் பரவுகிறது. எழுதினால் அதில் ஒரு கனதி இருக்க வேண்டும்..ஒரு பூரணத்துவம் இருக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு “இலக்கியப்பயம்’ ஏற்பட்டுவிடுகிறது... இப்போதெல்லாம் பத்திரிக்கை-சஞ்சிகைகளுக்கு பெரும்பாலும் நான் எழுதுவதில்லை... ‘படைப்புந்துதல்’ ஏற்பட்டால் எழுதி அதை என் வலைப்பூவில் பதிவேற்றி விட்டு சும்மா இருக்கிறேன்...


இணையத்தில் எனக்கு விருப்பமான பல தமிழ் எழுத்தாளர்களின் வலைப்பக்கங்களில் மேய்ந்து கொண்டிருக்கிறேன்... மேலும் சூபித்துவ தமிழ் இலக்கியங்களின் மீதான காதல் அதிகரித்துக் காணப்படுகிறேன்..




அஷ்ரப் சிஹாப்தீன்


பல் துறை எழுத்தாளர் - தீரன் .ஆர்.எம். நௌஷாத்

-அஷ்ரப் சிஹாப்தீன்


யாத்ரா என்ற கவிதை இதழை வெளியிடுவது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்த பிறகு நான் கலந்தாலோசித்த முக்கியமான நபர்களில் ஒருவர் தீரன் ஆர்.எம். நௌஷாத் .

தீரன் .ஆர்.எம். நௌஷாத் வித்தியாசமாக எதையும் நோக்கும் தன்மை கொண்டவர் . அவரது கவிதைகளில் மட்டுமன்றி அவரது சிறுகதைகள் –கட்டுரைகள்-விமர்சனங்கள்- என்பவற்றிலும் நாம் அதை அவதானிக்கலாம். 1980களில் தமிழ் இலக்கியப் பரப்பில் தோன்றிய புதுக் கவிஞர்களில் குறி ப்பிட்டுச் சொல்லக் கூடியவராக இருந்தார். பரவலாக வெளிவந்த பல்வேறு படைப்பாளிகளின் ஆக்கங்களுக்குள் நவ்ஷாத்தை தனித்து நாம் தரிசிக்கலாம்
. மனம் விட்டுப் பேசி வாய் விட்டுச் சிரிக்கும் தன்மை கொண்டவரும் இயல்பில் அதீத நகைச்சுவை உணர்வு கொண்டவருமான இந்தப் படைப்பாளியின் படைப்புக்கள் காத்திரமும் தீவிரமும் உரத்துப் பேசும் பண்பும் கொண்டவை.

நௌஷாத் .இதுவரை நான்கு நூல்களை நம் பார்வைக்குத் தந்துள்ளார்.-

வல்லமை தாராயோ...? (சிறுகதைத் தொகுதி)
நட்டுமை –(நாவல்)
வெள்ளி விரல் (சிறுகதைத் தொகுதி)
கொல்வதெழுதுதல். –(நாவல்)


ஞானம் வாசகருக்கு இவர் ஒரு சிறுகதை ஆசிரியராகவே அறிமுகம் ஆனார். ஞானம் நடத்திய பல்வேறு ஞாபகார்த்த சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றதன் மூலம் ஒரு சிறந்த கதை சொல்லியாக அவர் வெளிப்பட்டார். எனினும் 2000 ஆண்டில் இவரது –வல்லமை தாராயோ..?- சிறுகதை தொகுதி வெளியானது. ஆயின் குறிப்பிட்டளவு பிரதிகளே அச்சிடப்பட்ட இத்தொகுதியில் இடம் பெற்றிருந்தவை யாவும் பரிசுகள் பெற்ற அவரது சிறுகதைகளே.


2011 இல் தமிழ்நாடு காலச்சுவடு வெளியீடாக வந்த அவரது –வெள்ளி விரல்- சிறுகதை தொகுதி அவரது படைப்புத் திறனைப் பறைசாற்றியது . அநநூல் அவ்வாண்டுக்கான இலங்கை அரசின் தேசிய அரச சாஹித்திய விருதையும் கிழக்குமாகான சாஹித்திய விருதையும் பெற்றுக் கொண்டது.. இவற்றிலுள்ள சில கதைகள் என்னை ஆச்சரியப்பட வைத்தன. கதை நகர்த்தும் பாணி மாத்திரமல்லாது அவர் சொல்ல எடுத்துக் கொண்ட செய்திகளும் எது குறித்துச் சொல்கிறாரோ அது குறித்த தகவல்களில் அவரது அறிவுப் பின்னணியும் வியக்க வைக்கின்றன.
இவரது பல கதைகள் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பல்வேறு பரி சில்களை பெற்றுள்ளன.

 2008இல் ஞானம் சஞ்சிகை நடத்திய புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் –தாய்மொழி –சிறுகதைக்கு முதற் பரிசு வென்றார். தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நடத்திய சுஜாதா நினைவுப் புனைகதைப் போட்டியில் இவரது –சாகும்தலம்-சிறுகதையும்- பேராதனை பலகலைக் கழகத்தின் தமிழ் சங்கம் நடத்திய போட்டியில் –நல்லதொரு துரோகம் – சிறுகதை தங்கப் பதக்கம் வென்றது. அரச ஊழியருக்கான சிறுகதைப் போட்டி மற்றும் பல இலக்கியப் போட்டிகளிலும் சுமார் 19 சிறுகதைகளுக்கு பல்வேறு பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன.


இவரது கதைகள் பற்றி ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் பின்வருமாறு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது --- நௌஸாத்தின் சிறுகதைகளின் உயிரோட்டமான அம்சம் அவரது உரைநடை. அனுபவத்தைத் தொற்றவைப்பதற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்த –உணர்ச்சிக் கூறுகள் நிறைந்த - அதேவேளை சமூக யதார்த்தத்திலிருந்து விட்டகலாத நடைச்சிறப்பு அவருடையது. நௌஸாத் கதைசொல்லும் முறையில் ஒரு புதுமை இருக்கிறது. புதுப்புனல் ஊற்றின் குளிர்மைப் பிரவாகம் கொள்கிறது. அவருடைய சிறுகதைகளைப் படித்து முடித்ததும் அவைதரும் உணர்வுகள் படிப்பவர் மனதில் தொற்றி நிற்கின்றன...........


தவிரவும் தீரன் ஆர்.எம். நௌஷாத் ஒரு சிறந்த நாவலாசிரியரும் ஆவார். கிழக்கின் நாவல் தேக்கத்தை உடைத்து அதனை தமிழ்நாடு நோக்கிப் பாயவைத்த சிறப்பிற்குரிய இவரது –நட்டுமை- நாவல் 2009இல் காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமி பவள விழா நாவல் போட்டியில் முதற்பரிசு பெற்று வெளியாகி தமிழக – ஈழத்துப் படைப்பாளிகள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றது. இது தென்கிழக்குப் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறை சிறப்புமானி பட்டத்துக்காக ஆய்வு செய்யப்பட்டது. –ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 193௦ களில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நீர்ப் பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்சினையைப் பின்புலமாகக் கொண்டு முஸ்லிம் மக்களின் பண்பாடு வாழ்முறை சமய நம்பிக்கைகள் பள்ளிவாசல் கொடியேற்று விழா தீர்மானச் சடங்கு முதலானவற்றை அந்த மண்ணின் வாசத்தோடு நட்டுமை யதார்த்தமாகச் சித்தரிக்கின்றது ....என்று ராஜமார்த்தாண்டன் இந்நாவல் பற்றி விதந;துரைத்துள்ளார்.


மேலும் எம்.பௌசரின் முஸ்லிம்குரல் இதழில் வெளியான இவரது பள்ளிமுனைக் கிராமத்தின் கதையும் 2013இல்- கொல்வதெழுதுதல்-90-என்ற பெயரில் நாவலாக உருப்பெற்று காலச்சுவடு வெளியீடாக வந்தது.- இது அவ்வாண்டின் சாஹித்திய விருதின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவானது. மேலும் தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணையையும் பெற்றுக் கொண்டது. போர்க்கால இலக்கியத்தில் முஸ்லிம் மக்களின் வாழ்முறையில் திணிக்கப்பட்ட அவஸ்தைகள் அதற்கு பரிகாரமாக எழுந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் யதார்த்தம் என்பவற்றை திடமாகப் பதிவு செய்கிறது இந்நாவல் என விமர்சகர் எ.எம். ஜாபீர் பீ.ஏ சுட்டியுள்ளார்.


பொதுவாகவே இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகள் ஒரு சிறுபான்மைச் சமூகமாக அதன் இருப்பியல்வரலாறு குறித்து இலக்கியப் பதிவுகள் எழுதப்படவில்லை என்ற கவலை முஸ்லிம் சமூக ஆர்வலர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஓர் உறுத்தலான அம்சமாகவே இருந்து வருகிறது. அந்தக் கவலையை ஒரு சிறு அளவேனும் குறைக்கும் பணியை நௌஷாத்தின் கொல்வதெழுதல் நாவல் தீர்த்து வைத்திருக்கிறது என்பேன்.


2005 இல் ஈழநாதம் பத்திரிகையில் --வானவில்லே ஒரு கவிதை கேளு- என்ற இவரது குறுநாவல் தொடர்கதையாக வெளியாகியது.


கவிதை துறையைப் பொறுத்தமட்டில் இவரது அளிக்கைகள் ஏராளமாக உள்ளன.. இவர் கல்முனை புகவம் வெளியிட்ட தூது கவிதை சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்தவர்... மிகச் சிறிய வடிவில் தூது வெளிவந்த போதும் அது வெளியான காலகட்டத்தில் (1983---1989)கவனிப்புப் பெற்ற கவிதைச் சஞ்சிகையாக வளர்ந்து வருவோர் மத்தியில் பிரபலம் பெற்றிருந்தது மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பதினாறு இதழ்கள் வெளிவந்தன.

பின்னர் எல்லா சஞ்சிகைகளுக்கும் ஏற்படும் துயரம் அதற்கும் ஏற்பட்டது. இந்தச் சின்னஞ் சிறிய இதழ்தான் யாத்ரா என்ற ஒரு கவிதை சஞ்சிகையை கொண்டு வர வேண்டும் என்ற எண்னத்தை என் மனதில் ஊன்றியது. ஏராளமான கவிதைகளும் குறும்பாக்களும் இவர் எழுதியுள்ள போதிலும் இவரிடமிருந்து ஒரு கவிதை தொகுதி கிடைக்கவில்லை எனினும் இவரது சில கவிதைகள் தொகுக்கப்பட்டு –அபாயா என் கருப்பு வானம்-என்ற தலைப்பில் இந்தியா பிரதிலிபி அமைப்பினால் மின்னூலாக வந்துள்ளது.இதனை (http://www.pratilipi.com/theeran r-m-nawshad) என்னும் தளத்தில் காணலாம்


தீரன் ஆர்.எம். நவ்ஷாத் வானொலி நாடகத் துறையிலும் தன காத்திரமான பங்களிப்பை செய்துள்ளார். 1998 இல் தினக்குரல் பத்திரிகையும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் வானொலி நாடகப் போட்டியில் இவரது -காகித உறவுகள்- நாடகம் மூன்றாம் பரிசு பெற்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் இவரது சுமார் இருபது நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. சில நாடகங்களில் நானும் நடித்துள்ளேன். அவற்றில் ஒரு கிராமத்தின் கவிதை- நாடகம் சுமார் இருபத்தைந்து தடவை மறு ஒளிபரப்புச் செய்யப்படுள்ளது ...


இவை தவிர இலங்கையின் முதல் ஹைக்கூ சஞ்சிகையான-- புள்ளி --இதழின் துணை ஆசிரியராகவும்.... சாய்ந்தமருது அபாபீல்கள் அமைப்பின் வெளியீடான –இரண்டாவது பக்கம்- கவியிதழின் ஆலோசக ஆசிரியராகவும் – மற்றும் வாஷிங்டன் கனவு –கவிதை தொகுதியின் தொகுப்பாளராகவும் –இன்னாலில்லாஹி – (இனக்கலவர இலக்கிய ) தொகுப்பாசிரியராகவும் இருந்து பல முயற்சிகளை செய்துள்ளார்.


நௌஷாத் தொழில் ரீதியாக தபால் திணைக்களத்தில் ஒரு பொறுப்புத் தபாலதிபராக 31 வருடங்கள் கடமையாற்றி விட்டு அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார். கல்முனை ஸாஹிரா கல்லூரியின் இலக்கியப் பண்ணையில் உருவானவன் என்பதில் பெருமை கொள்ளும் இவர் தனக்கு தமிழ் கற்பித்த கொக்கூர்கிளான் கா.வை. இரத்தினசிங்கம் ஐயா – ஆரம்ப காலத்தில் தனக்கு களமமைத்து தந்த தினகரன் உதவி ஆசிரியர் உயர்மிகும் எம்.ஆர். சுப்பிரமணியம் ஐயா.- இலக்கியத் துறையில் புதிய சிந்தனைகளை தனக்குள் ஊன்றிய மர்ஹூம் பாவலர் பஷில் காரியப்பர் – தன் ஆத்மீக குருநாதர் சூபி சபூர் ஒலியுல்லாஹ் அவர்களையும் மற்றும் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களையும் என்றும் நன்றியுடன் நினைவிற் கொள்கிறார்.


சமகாலப் படைப்பாளிகள் என்று எடுத்துக் கொண்டாலும் கடந்த கால இளம் படைப்பாளி என்று எடுத்துக் கொண்டாலும் பட்டியலின் முன்னணியிலேயே அவர் இருந்து வந்திருக்கிறார் என்பதற்கு அவருடனான 20 வருட நட்பையும் இலக்கிய உரையாடல்களையும் அவரது படைப்புக்களையும் முன்னிறுத்தி என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
அவருடைய படைப்புத் திறமை அளவுக்கு அவர் பேசப்படாமல் போனதற்கான முக்கியமான காரணம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் படைப்புக்களைத் தவிர வேறு எந்த வழிகளையும் அவர் கையாளாததும் இன்னொரு காரணம் ஒரு குறிப்பிட்ட காலம் அவர் எழுதாமலே ஒதுங்கியிருந்ததும்தான்.

தொழில் ரீதியாக அவர் ஓய்வு பெற்ற பின்னர் இலக்கியத்தில் அவர் இயங்கிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் சந்தோசத்தைத் தருகிறது. எமக்குள் இருக்கும் நட்புக்கு அப்பால் நான் அவருடைய வாசகனாக இருப்பதுதான் அந்த மகிழ்ச்சிக்கான காரணமாகும்.
எந்த ஒரு இலக்கிய வட்டங்களினதும் “இஸம்”களினதும் பிடிகளுக்கும் இறுகிக் கொள்ளாமல் தனித்துவமாக வாழ்வதால் தனக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பினாலும் ஒரு விருதோ பொன்னாடையோ போர்த்தப்படவில்லை என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிற இவர் பற்றிய விரிவான தகவல்களை மின்வெளி என்ற இணைய தளத்தில் காணலாம் (http://theeran1959.blogspot.com/) அன்னாருக்கு நமது வாழ்த்துக்கள் ...





ஜனூஸ் சம்சுதீன்

ஜனூஸ் சம்சுதீன்


 தீரனின் 'நட்டுமை' நாவல் வாசிப்பின் உச்ச அனுபவம் தந்தது.

கண்ணன் சுந்தரம்


Kannan Sundaram
18 hrs ·

ஆர் எம் நவ்சாத்தின் கீழ்க்காணும் நேர்காணல் பற்றி இலங்கை வாழ் நண்பர் என்னிடம் தெரிவித்தார். அதில் காலச்சுவடு சார்ந்த பகுதியை அனுப்பி வைக்க கேட்டிருந்தேன். கீழே கொடுத்திருக்கிறேன்.

நவ்சாத்தின் படைப்பு காலச்சுவடில் வெளிவருவதை அடுத்து யாரும் கோள் செய்யவில்லை, யாரும் பறந்து வரவும் இல்லை. அத்தகைய செயல்பாடுகளுக்கு இடம் கொடுக்கும் அமைப்பு அல்ல காலச்சுவடு. பிரதி பற்றிய எங்கள் வாசிப்பும் கணிப்பும் மட்டுமே முக்கியமானது. இதன் அடிப்படையிலேயே அவரது மூன்று நூல்களை வெளியிட்டுள்ளோம். இத்தகைய கற்பனைகள் நம் சூழலை மாசுபடுத்துபவை, படைப்பாளிகளை உள்ளொடுங்கச் செய்பவை. அவசியம் தவிர்க்கப்பட வேண்டியவை.


//கேள்வி : இலக்கியத்தின் பெயரால் ஏற்படும் குழப்பங்களையும் நெருக்கடிகளையும் எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?
பதில் : எந்தத் துறையையும் விட இலக்கியத் துறையில்தான் போட்டி ,பொறாமை ,குத்து வெட்டு ,காழ்ப்புணர்வு ,காவு கொடுத்தல் ,பழிக்குப் பழி ,கோஷ்டி மோதல் ,காலை வாருதல் ,தட்டிப் பறித்தல் ,வெட்டிக் கிழித்தல் ,கோள் காவுதல் ,நக்கல் ,நையாண்டிகள் ,முதுகில் குத்துதல் எல்லாமே மிக மிக அதிகம் .

மேலும் ,இலக்கியப் பட்டியல் வியாபாரிகள் சிலர் இருக்கிறார்கள் .பெத்தம்மா மொழியில் ஒரு சில படைப்பாளிகளையே பட்டியலிடுவார்கள் .மேடைகளில் முழங்குவார்கள் .இதற்கு சில காரணங்கள் உள்ளன .தான் சார்ந்த கோஷ்டியில் இருந்தால் தூக்கிப் பிடிப்பார்கள் .எதிர்க் கோஷ்டியில் இருந்தால் வெட்டி விடுவார்கள் .மற்றது புதிய எழுத்துகளை அவர்கள் படிப்பதில்லை .புதிதாக எழுதுவோரைத் தெரியாது .ஏதோ தான் ஒருவரைப் புகழந்தால்தான் அல்லது பட்டியலில் இட்டால்தான் அவனால் பிரபலமாக முடியும் என்று குருட்டுத்தனமாக நம்புகிறார்கள் .

எங்கள் பிரதேச எழுத்தாளர் ஒருவர் என்னுடைய நட்டுமை எனும் நாவல் பற்றி ஒரு கோள் காவிக் கொண்டு தமிழ்நாடு -நாகர்கோவிலுக்கு விமானத்தில் பறந்து அந்தக் கோளை காலச்சுவடு ஆசிரியரிடம் மூட்டிக் கொடுத்து விட்டு நிம்மதி கண்டார்...//


Uma Varatharajan கண்ணன் ,திருவனந்தபுரம் செல்லாமல் நாகர்கோயிலுக்கு நேரடியாக விமானத்தில் வந்திறங்கும் வசதி வந்து விட்டதா ? :)
கோள் சொன்னவன் போனைப் பயன் படுத்துவதில்லை போலும் .
ஆஹா ! என்ன கற்பனை வளம் ...:)

தீரன். ஆர்.எம் நௌஷாத் '('....ஆர் எம் நவ்சாத்தின் கீழ்க்காணும் நேர்காணல் பற்றி இலங்கை வாழ் நண்பர் என்னிடம் தெரிவித்தார். ...') .என்று கண்ணன் சேர் சொல்லியிருப்பதிலிருந்தே தெரிகிறது இந்த இலங்கை வாழ் நண்பர் நம்மைப் பற்றி கண்ணன் சேரிடம் ‘’எத்தி’ வைப்பதில் எத்தனை அக்கறையாய் இருக்கிறார் என்பது.... காலச்சுவடு என் இலக்கிய வாழ்வின் விடிவெள்ளி... அதை நான் மறக்கமாட்டேன்... நேர்காணலில் நான் நெய்த தொப்பி எத்தனை அழகாகப் பொருந்துகிறது அவருக்கு,,

ஏ.எம். சாஜித்

ஈழத்து படைப்பாளிகளையும் பேசுவோம் (1)
சாஜித் 


இதனை ஈழத்து பூதந் தேவனாரில் இருந்து ஆரம்பிக்க வேணடியிருந்தாலும் சமகாலத்தில் இயங்குபவர்களை தொட்டு எமது பார்வையினை செலுத்தலாம் என நினைக்கிறேன்...

முதலாவதாக தீரன். ஆர்.எம் நௌஷாத் ஈழத்தில் மிக முக்கியமான படைப்பாளி கிழக்கின் மண்வாசனையினை தனது நாவல்களினூடே வெளிப்படுத்தி தனக்கான எழுத்துக்களை வடிவமைத்துக் கொண்டவர். நட்டுமை, கொல்வதெழுதுதல், நாவலும் வெள்ளி விரல் எனும் சிறுகதை தொகுப்பு என படைப்புக்களை தந்த தீரன் தற்பொழுது இலக்கிய உரையாடல்கள் மூலமாக ஈழத்து பரப்பில் இயங்கி வருகிறார்...

முகநூலே இன்றைய இலக்கிய செற்பாட்டுத் தளத்தின் வீரனாக வலம் வருகின்ற நிலையில் தீரனின் எழுத்துலகம் பற்றி ஈழத்துப் படைப்பாளிகள் கதையாட வேண்டிய கால கட்டம் நெருங்கியுள்ளது. தமிழ் இலக்கிய பரப்பின் நாவல்களின் வருகையில் தீரனின் படைப்புக்கள் நிறைய விவாதங்களை பேசக்கூடியவை கிராமிய வாழ்வு முறை தொட்டு அரசியல் தளம் வரைக்கும் கதையாடிய மிக நீண்ட பரப்பினை தனது நாவல்களில் பேசியவர் தீரன்...

இதில் கொல்தெழுதுதல் அரசியல் சூழலில் நின்று இயங்கிய ஒரு ஹீரோயிசப் பிரதி என்றே கூறலாம். இவ்வகையான புதுமைப் படைப்புக்கள் ஈழத்து சூழலில் பெரும் கதையாடலினை தோற்றுவிக்கக் கூடியவை. அவை பற்றி நிறையப் பேச வேண்டும். நாம் இருக்கிறோம், செத்து மடியவில்லை எமது எழுத்துக்களும் காத்திரம் மிக்கவைதான் என முழு இலககிய சூழலுக்கும் எத்தி வைக்க எமது படைப்பாளிகள் முன் வருதல் அவசியமாகிறது...

 ஈழத்து சூழலில் அதிகம் கதையாடப்பட வேண்டிய கதையாடாமல் மறுதலிக்கப்பட்ட தீரனின் கொல்வதெழுதுததல் நாவல் மிக முக்கியமானது...

போரினை மட்டும் மையமாகக் கொண்ட நாவல்களை பேசு பொருளாகக் கொள்பவர்கள் முஸ்லிம் சமூக மைய விளையாட்டினை பேசிய அதிரடி ரியலிச நாலான கொல்வதெழுதுதலை மறந்து விட்டனர் எனும் ஆதங்கம் இன்றும் என் மனதில் உள்ளது...



குறிப்பு: இது தேடலுக்கான கோடு மட்டுமே. ஆகையால் தீரனின் படைப்புக்களைத் தேடி வாசிப்போம். பேசுவோம்...
(நாளை இன்னுமொரு ஈழப் படைப்பாளியுடன்....)
சாஜித்..

உக்குவளை அக்ரம்

Ukuwelai Akram
https://www.facebook.com/profile.php?id=100008242998047&fref=ufi

தீரன் ஆர்.எம்.நவ்சாத்

படைப்புலகில் புகுந்த நேரம் அறியாத பெயர்.பண்ணாமத்துக்கவிராயருடன் கலந்துரையாடும்போது, அடிக்கடி உச்சரிப்பார் என்னமா எழுதறார், வட்டார பேச்சுவழக்கில் ஒவ்வொரு கதையும் புது அனுபவம்.இப்படித்தான் தீரனின் பெயரை உச்சரிப்பார்.
இலக்கிய ஆளுமைகளுடனான குறைவான சகவாசம், சந்திப்புகள் அற்று ஒதுங்கியிருந்தபோது.அவரின் புத்தகத்தை பல புத்தகசாலைகளில் கேட்டு நொந்து போயிருக்கிறேன்.பெயர் மாத்்திரம் ஜெபிக்கப்படும மந்திரம் போல் மனதில் சுழன்றே வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு தமிழ் மிரரில் தீரனின் கதையை கண்டு வாசித்து இன்புற்ற திளைப்பால் சிறு குறிப்பிட்டேன்.அதற் பிற்பாடே அவருடன் முகநூலில் நட்பாகும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அதன் பிறகு அவரின் ஹாஸ்யம் கலந்த பதிவுகளையும், தனித்துவமாக அவரிடும் புகைப்படங்களையும் உவப்புடன் உள்வாங்கியே நகர்ந்திருக்கிறேன்.
இன்று தமிழ் மிரரில் அவருடைய நேர்காணலை, பக்கத்திலிருந்து உரையாடுவதைப்போன்ற இயல்பு தன்மையோடு, மனதோடு ஒண்றித்துப்போன வார்த்தைகளுடன் அவர் வெளியில் உலாவினேன்.அவரின் மன உணர்வுகள் போன்றே.என் இலக்கியப்பாதையை அடியொட்டி நகர்ந்திருக்கிறேன்.திறமை பல கண்டிருந்தும் இயல்பாக தன் எளிய வாழ்வை எளிமையாக கடந்துபோகும் மனமும் பங்குவமும்.
அவருக்கு நிகர் அவரே.

மருதநிலா நியாஸ்

சமூகம் சார்ந்த யதார்த்த விடயங்களைத் தத்ரூபமாகப் படம்பிடித்து கண்முன்னே காட்சிகளாகத் தரும் எழுத்தாற்றல் மிக்க எழுத்தாளர் ஆர்.எம்.நௌஸாத் அவர்கள்

ஜிப்ரி ஹாசன்

ஜிப்ரி ஹாசன்--- 


தீரனின் ஒட்டுமொத்தப் படைப்புகள் மீதும் விரிந்த பார்வையை முன்வைக்க வேண்டும். அதற்கான முயற்சியில் நானும் இருக்கிறேன். தமிழகத்திலுள்ள பல படைப்பாளிகளை விஞ்சி நிற்பவர். இலங்கை என்பதற்காக எத்தனை மூடி மறைப்புகள். நாம் இந்த விடயத்தில் இணைந்தே பயணிக்கலாம். 

கிண்ணியா சபருள்ளா

Sabarullah Caseem


Theeran , no doubt at all has been an inevitable writer in the contemporary tamil literature of this country. His literary works are highly commendable and making us proud of his master piece of literary works. I have gone through his vellinviral (anthologybof short storirs) and "kolvathelutha" novel. In one word, i was frozen of his writings. Also i have made a lngthy criticism over those two books. Theeran has impressed his name i this field but as usual his name has been concealed as occured to other best writers.

முஸ்டீன்


தீரன் --- A silent terror
------------------------------ 
முஸ்டீன்



எனக்குத் தீரனை அறிமுகப்படுத்தியது முஸ்லிம் குரல் பத்திரிகையில் வெளிவந்த பள்ளிமுனைக் கிராமத்தின் கதை என்ற தலைப்பில் தொடராக வந்த நாவல்தான். அதில் ஒரு அத்தியாயம்கூட மிஸ் ஆகிவிடக்கூடாது என்ற தீவிரத்துடன் நான் படித்துவிட்டுஅதை
 அப்படியே கிழித்து சேமித்து வைக்கும் அளவுக்கு ஈர்க்கச் செய்தவர்.தீரன் என்ற ஆர்.எம். நௌசாத்

. நாம் முகம் காணாமல் நேசித்த படைப்பாளிகள் நம்மோடு தொடர்புகொள்ளும் போது
அப்படியொரு பேரின்பத்தை அனுபவிப்பது வாஸ்தவம்தானே.  அறிந்திருப்பதும் அறிமுகமாகிக் கொள்வதும் பின்னர் நண்பராகஉறவாக குடும்பமாக இறுகி உணர்வதும் நடத்தையின்பால் விளையும் நேசத்தின் பிரதிபலிப்புக்களே, அப்படித்தான் என்னைவிட 23 வருடங்கள் மூத்த எனது தந்தையின் வயதையொத்தஆர்.எம்.நௌசாத் அவர்களின் தொடர்பும் எதிர்பார்ப்புகளில்லாத அன்பினால் அடைப்புக்குறியிடப்பட்டுத்
தொடர்கின்றது. 


எந்த முகாமுக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாமல் பயணித்துக்கொண்டிருப்பவர். இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுதியையும் தந்திருப்பவர். சோளப் பொறி போல கொஞ்சோண்டுஎண்ணெய்யில் பொரிந்து ஊதிப் பெருத்து வெண்மை காட்டி பார்வையைக் கவர்ந்துபின்னர் கொஞ்ச நேரத்தில் காற்றேறி ஜவ்வாகி எதற்கும்பிரயோசனப்படா
து குப்பைத் தொட்டியைத் தஞ்சமடையும் துரதிஸ்டத்திலிருந்து பல காத
தூரம் தள்ளியிருந்து தப்பித்து வாழும் ஓர் எளிமையான படைப்பிலக்கியவாதி. யாருடைய சிபாரிசும் பரிந்துரையும் சேர்டிபிகட்டும்இல்லாமலேயே காலச்சுவடு பதிப்பகம் இவரது மூன்று நூல்களைப் பதிப்பித்துஇருக்கின்றது. 

காலச்சுவட்டின் பதிப்பு நேர்த்தியும் வாசகர் வட்டமும் கவனம்பெறுபவை. சுந்தர ராமசாமி என்ற ஆளுமைதான் காலச்சுவட்டின் ட்ரேட் முத்திரை, தரச் சான்றிதழ் என்பது எனது அவதானம்.சுந்தர ராமசாமியின் நினைவாக நடாத்தப்பட்ட நாவல் போட்டியில்
முதல்பரிசு பெற்றதுதான் நட்டுமை. பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றசிறுகதைகளின் தொகுப்புதான் வெள்ளிவிரல், 

இவை வெளிவந்த பின்னர்நௌஸாத்தின் புத்தகங்களை ஏன் பதிப்பித்தீர்கள் என்று கேள்விகேட்டு கண்ணனுக்கு நிச்சயம் இங்கிருந்து கடிதம் போயிருக்கவேண்டும். அல்லது அவரைப் பற்றிக் கண்ணனிடம் தாறுமாறாகமோசமான தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் பிரதேச இலக்கியப் பொம்மைகளால் இவை மேற்கொள்ளப்பட்டிருக்கும்.அப்படி நடந்ததா இல்லையா என்பதைக் காலச்சுவடு கண்ணன்தான் தெளிவுறுத்த வேண்டும். ஏனெனில் இங்குள்ள சில முக்கிய புள்ளிகளின் இரத்தத்தில் ஊறிப் போய் நாய் வாலைப் போல நிமிர்த்திட முடியாத பண்புஅது. ஆயினும் காலச்சுவடு இதெற்கெல்லாம் ஆட்டம்கண்டுமுடிவெடுக்கும் வக்கற்ற கூனல் நிலையில் இல்லையென்பதும் எனதுஅவதானம். 

அண்மையில் கண்ணன் அவர்கள் வருகை தந்த போது பல்வேறுகுழுக்களைச் சந்தித்துவிட்டுச் சென்றதாக அறிந்தேன் நௌஸாதையம்சோலைக் கிளியையும் சந்திக்க அவர் விரும்பியிருக்கக் கூடும் ஆயினும் அது நிறைவேறியிருக்காது என்று நம்புகின்றேன். இதனால்தான் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் தொடர்ந்த சந்திப்பில்முக்கால்வாசி என்னைக் கதைக்க வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்.

விடைபெறும் போது அவரது நட்டுமை, வெள்ளிவிரல்கொல்வதெழுதுதல் 90 ஆகிய மூன்று புத்தகங்களையும்அன்பளிப்புச் செய்தார். அன்றைய பிராயாணத்திலேயே
கொல்வதெழுதுதல் 90 நாவலைப்படித்து முடித்துவிட்டேன், அத்துடன்
பாதிச் சிறுகதைகளையும் கூட,


நௌஸாத் ஆகிய தீரன் என்ற சைலன்ட் டெரரின் அடுத்த படைப்புக்களை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். 

இப்படி அடுத்த படைப்பை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கும்

 படைப்பாளிகள் நம்மிடம் வெகு குறைவு என்பதை மனதிற் கொண்டு

 அவசரமாக செயற்படுங்கள்.

எஸ், நளீம்

எங்கள் தேசம்- நேர்காணல் -எஸ், நளீம் 
தீரன். ஆர்.எம். நௌஸாத்

௦௦-- ~வல்லமை தாராயோ.. (2000) ~வெள்ளிவிரல்| (2011) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகள்
௦௦-- ~நட்டுமை| (2009) கொல்வதெழுதுதல்90 (2௦13)—ஆகிய இரு நாவல்கள்
௦௦-- தமிழ்நாடு ~காலச்சுவடு|  இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில்  ~நட்டுமைநாவலுக்கு முதற் பரிசு
௦௦-- அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு நாவல் போட்டியில் வக்காத்துக் குளம் நாவலுக்கு மூன்றாம் பரிசு
௦௦-- கொல்வதெழுதுதல்90 நாவல் தமிழக அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான ஆணை பெற்றது.
௦௦-- ~வெள்ளிவிரல்சிறுகதைத் தொகுதிக்கு  2011ல் இலங்கை அரசின் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும்
௦௦-- 1998ல்  ~தினக்குரல்நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்என்ற தனது வானொலி நாடகத்திற்கு 3ம் பரிசு
௦௦-- 1983---1989காலப்பகுதியில் தூது என்ற கவிதைச சிற்றிலக்கிய ஏடு 16  இதழ்கள் வெளியீடு.
௦௦-- ~நல்லதொரு துரோகம்|  என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம்  முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..
௦௦-- ~சாகும்-தலம்.சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.
௦௦-- ~ஞானம்சஞ்சிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில்  ~தாய்-மொழிசிறுகதைக்கு முதற்பரிசு

௦௦-- தீராவெளி என்னும் வலைப்பூவில் மேலும் தகவல்கள் பெறலாம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------



01.நீங்கள் இலக்கியத்துக்குள் நுழைவதற்கு பின்புதான் இருந்தவரை எவை?
யாரும் ‘டிக்கட்’ பெற்றுக் கொண்டு இதற்குள் நுழைவதில்லைதானே...
என்னைப் பொறுத்தவரைக்கும் என் குடும்பப் பின்னணிதான் ஒரு பெரிய தூண்டுகோலாக இருந்தது..  என் பெற்றோர்,உடன் பிறந்தோர் அனைவருமே வாசிப்பதில் தீவிர நாட்டம் கொண்டவர்கள்..தாய் வீடு ஒரு நூலகமாகவே இருந்தது...நான் பத்து வயதில் வீட்டில் ஒரு கையெழுத்துச் சஞ்சிகை கூட  தயாரித்து நடத்தினேன்.. வாப்பா என்னை ‘எழுத்தாளரே..” என்றுதான்  அழைப்பார்.. உம்மா என் முதல் வாசகியாக இருந்தார்... இதன் பின்னணி என்னை எழுத்தை விட்டும் விலக முடியாதபடி செய்துவிட்டது...

02. உங்கள் "அபாபீல்" கள் இலக்கிய வட்டம்..மற்றும் ‘புகவம்” அதன் வெளியீடுகள்..செயற்பாட்டாளர்கள் இப்போது எங்கே?
எல்லாம் பொய்யாய் பழங்கனவாய் போயின.....1980 களில் கல்முனை புகவம் (புதிய கவிஞர் வட்டம்) என்ற பெயரால் நான், ராபீக், கபூர்  கல்முனை ஆதம்,கலீல், கல்முனை அபூ என்று  சிலர் ஒன்று சேர்ந்தோம்.. இளமை உற்சாகத்துடன் றோணியோ சஞ்சிகைகள்-போட்டோ பிரதிப் பிரசுரங்கள் வெளியிட்டோம்.. ‘’மின்னல்- வாஷிங்டன் கனவு- இன்னாலில்லாஹி- பாதா- விடியலை நோக்கி அவனுக்காக- இப்படி சில பிரசுரங்கள்....  யுத்தம் ஆரம்பித்த சூழலில் “தூது” என்ற பெயரில் கவிதை ஏடு ஒன்றினை கொணர்ந்தோம்...1989 வரை இடைவிடாது நடத்தினோம்.. அதன் பின் அபாபீல்கள் என்ற பெயரில் மீண்டும் ஜாபீர்நகீபு ஆகியோருடன் தொடங்கினோம்.. இரண்டாவது பக்கம் கவியேட்டை நடத்தினோம்..
யுத்தம் தீவிரம் பெற்ற போது தீவிரவாதிகளின் கவனிப்பு எங்கள் மீது விழுந்தது.. எம்மில் பலர் தலைமறைவாக வேண்டி வந்தது.. புகவம் அமைப்பின் தலைவர் ராபீக் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். கபூர் புலிகளினால் கொல்லப்பட்டார். ஷபீக் அகால மரணமானார்.. அபூ புலம் பெயர்ந்தார். கல்முனை ஆதம் தலைமறைவானார்.. நானும் தொழில் நிமித்தம் ஊரை விட்டுப் பிரிந்தேன்...
 காலக்குதிரையின் ஓட்ட வேகத்தில் மூச்சிரைத்துப் போய் திக்கொருவராய் பிரிந்தோம்..  எஞ்சியோர், இப்போ தனித்தனித் தீவுகளாய் வாழ்கிறோம்..

03. "சிவந்த பள்ளிகள்”” மற்றும் ‘’தூது" காலத்து தீரன் இன்னும் உங்களுக்குள் வாழ்கிறாராஇந்த முஸ்லிம் அரசியல் கொந்தளிப்புக் காலத்திலாவது வெளிவரமாட்டாரா?
முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்தி சிங்கள-தமிழ் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட வேண்டும்..நமக்காக ஒரு கட்சி, ஒரு நிலம், ஒரு நாடு.. வேண்டும் ..என்றெல்லாம் வெகு தீவிரமான சிந்தனைப் போக்குடன் இயங்கிய அந்தக் காலத் தீரன் ஓய்ந்து போய் விட்டான்... இப்போதிருப்பது வாழ்வின் காலச் சாட்டையடிகள் வாங்கிய 57 வயது கிழவன்... நடப்பது யாவும் லஹ்புள் மக்பூளில் எழுதப்பட்ட மாபெரும் படைப்பாளனின் கைவண்ணமே என்பதை உணர்ந்து கொண்ட ஒரு சிற்றெறும்பு...

04. உங்களுக்குள் இந்த நையாண்டிநகைச்சுவை உணர்வு எப்படி வந்ததுவிஷேச காரணங்கள் உண்டா?
நகைச்சுவை என்பது நிறமூர்த்தத்தில் ஊறிப் போனது,, வலிந்து உற்பத்தி செய்ய முடியாது.. அதுவாக வந்து விழுகிறது...

05. கவிதை எழுதிக் கொண்டிருந்த நீங்கள் எப்படி சிறுகதைநாவல் என்ற வடிவங்களுக்குள் நுழைந்தீர்?
பெருகிய உணர்வின் இறுகிய வடிவம் கவிதை என்றார் என் குருநாதர் பாவலர் பசில் காரியப்பர்.  பல சமயங்களில் பெருகிய உணர்வை  என்னால் இறுக்கமாக கையாள முடியவில்லை... அது சிறுகதைகளாக நாவல்களாக பிரவாகித்து விட்டது..

06. உங்கள் நாவல்களுள் அதிக கவனிப்பைப்பெற்ற நாவல் எதுஏன்?
நட்டுமை நாவல்தான் அதிகமாக கவனிப்பை பெற்றது. காலச்சுவடு நடத்திய  சு.ரா. நினைவு நாவல் போட்டியில் அது முதற் பரிசை வென்றதும், அது அரச ஊழியர் ஆக்கற்திறன் போட்டியில் வென்றதும், 1930ஆம் ஆண்டு காலத்தைய அதன் கதைத் தளமும் காரணங்களாக இருக்கலாம்.

07. இந்திய வெளியீட்டகங்கள் மூலம் நூல்களைப் பதிப்பிப்பதில் நீங்கள் சந்தித்த சாதக பாதகங்கள் எவை?
தமிழகத்தின் நாவல் ஜாம்பவான்களை முந்திக் கொண்டு ‘இலங்கைஎழுத்து’ என்று அடையாளம் பெற்று ஒரு நாவலாசிரியனாக அங்கீகாரம் பெற்றதும்  ‘கொல்வதெழுதுதல்.90.’ என்ற என் நாவல் தமிழக அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்று  ஆயிரம் நூலகங்களில் வைக்கப்பட்டதும் சாதகங்களே.. தமிழகத்தில் பதிப்பிக்கப் பெற்றதால் அதன் பதிப்புரிமை இழந்து விடுவதும், சொற்பளவு பிரதிகளே நமக்குக் கிடைப்பதும், நம் நாட்டு வாசகர்,எழுத்தாளர்களை அதிகளவில் சென்றடையாமையும்  ,  இலங்கையில் ஒரு போட்டிக்கும் அனுப்ப முடியாமையும் பாதகங்கள் ஆகின்றன....

08. முன்,பின் நவீனத்துவங்கள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள ப்படும் என்றில் உங்கள் எழுத்துக்கள் எந்த இடத்துக்குள் அடங்கும்?
நவீனம்  எழுதுவதே என் பணி.. அதை முன்-பின் நவீனத்துவங்களுள் வரையறை செய்வது என் வேலையல்ல....

09. தங்களின் புதிய நூல்கள் வெளிவரவிருக்கிறதாஅவைகள் பற்றி கூறுங்கள்?
அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற என் ‘வக்காத்துக் குளம்’ நாவல்  விரைவில்  வெளியிடப்பட இருக்கிறது. மேலும் ஒரு சிறுகதை தொகுதியும் கொண்டு வரும் முயற்சி ஒரு பிரபல பதிப்பகத்துடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறது .

10. முகப் புத்தகம் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
தினசரிப் பத்திரிகைகள்-சஞ்சிகைகள் தவிர மேலதிக தளமாக இலக்கியங்கள் இப்போது முக நூல்களுக்குள் ஊடுபாய்ந்து விட்டது.. காலமாற்றத்தை வரவேற்றுப் பயன்படுத்துவோம்..
  
11. எழுத்தின் மூலம் நீங்கள் பெற்ற அசைவுகள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?
ம்ஹ்ம்.... நான் அசையவேயில்லை..

12. புதிதாக எழுத வருபவர்களுக்கு தங்களின்ஆலோசனைகள் என்ன?
வாசியுங்கள்....யோசியுங்கள்...நேசியுங்கள் ...அவ்வளவுதான்..






அப்துல் ரசாக்

தீரன் : எம்மிடையே வாழும் தீராத கதைசொல்லி. அநாயாசமாய் கதைசொல்லும் தீரனின் கதைகளில் உள்ளுறையாய் ஔிந்திருக்கும் அங்கதம் நம்மை வாழ்வின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இழுத்துச் செல்லும். இவரது 'வெள்ளிவிரல்' குறித்து பொதுவெளி நிகழ்வில் உரையாடியது தீராத காய்ச்சலுக்கிடையில் பருகிய ஔடதம் போன்றது.

ரஹ்மத் ராஜகுமாரன்

Rahmath Rajakumaran

FB நண்பர்களில் தீவிரமாக ரசிக்கக் கூடிய நண்பர்களில் தீரனும் ஒருவர் இலங்கையில் நேரில் பார்த்த போது ரொம்பவும் யதார்த்தமாக இருந்தார்
கவிதை வாசித்த போது கலக்கி விட்டார் கலக்கி....













Like






Love




Haha




Wow




Sad




Ang

சிராஜ் மஷூர்

Siraj Mashoor


நூலின் தலைப்பு பிரமாதம். உள்பெட்டிக்கு வராதீர்கள், தபால் பெட்டியூடாக வாருங்கள் என்று சொல்ல தீரனுக்கு அதிக உரிமையுண்டு. காலம் காலமாக தபால் பெட்டியோடு மல்லுக்கட்டியவர் அவர்.

ஆற்றலும் மண்வளமும் கலந்த எழுத்தின் சூட்சுமம் தெரிந்தவர் தீரன். அவருடைய பல புத்தகங்கள் இந்தியப் பதிப்பாக வந்ததால் அவருடைய எழுத்து பரவலாக இங்கு அறிமுகமாகியிருக்கவில்லை. இதனை அவரிடமே ஒரு குறையாகவும் சொல்லியிருக்கிறேன். இப்போது அந்தக் குறை நீங்க அவரே வாய்ப்பளித்திருக்கிறார்.

இலக்கிய நண்பர்களும் வாசகர்களும் இதற்கு கைகொடுக்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள். எழுத்தாளனே தன் புத்தகத்தைக் கூறி விற்க வேண்டும் என்பது நமது இலங்கை எழுத்தாளர்களின் தலைவிதி. பதிப்பகங்களால் பாதிக்கப்பட்ட பலரின் சோகக் கதைகளை அடிக்கடி கேட்ட வண்ணமே இருக்கிறோம். தீரனுக்கு இவ்வாறான கையைக் கடிக்கும் சோதனைகள் வரக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்