தீராவெளி

Saturday, February 16, 2019

நந்தினி சேவியர்

பிடித்த சிறுகதை - 267.
************************'
2011ஆம் ஆண்டு எனது 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' தொகுதி கொடகே நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
கிழக்கு மாகாண சிறந்த நூல் தெரிவு செய்யும் குழுவில் நடுவராக நானும் இருந்தேன்.
அதன் காரணமாக கிழக்கு மாகாண
நூல் தெரிவுக்கு எனது நூலை நான் அனுப்பவில்லை.
வடக்கு மாகாணத்திற்கே அனுப்பினேன்.
அம்மாகாண பரிசை எனது நூல் பெற்றுக்கொண்டது.
கிழக்கு மாகாணத்தில் நான் தெரிவு செய்த
நூலாக இவரது நூலே இருந்தது.
அவரைப் பாராட்டிய நான் தேசிய சாகித்திய
விருதுக்கு உங்கள் நூலை அனுப்பினீர்களா என்று கேட்டேன்.
அவர் இல்லை என மறுதலித்தார்.
ஆனால் தேசிய சாகித்திய விருது எங்கள் இருவருக்குமே பகிர்ந்து வழங்கப்பட்டது.
நூலை தேர்வுக்கு அனுப்பவில்லை என்று
அவர் கூறிய பொய் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது.
இதை அவரிடம் கூறி அவரது நட்பிலிருந்து
நான் விலகிக் கொண்டேன்.
நண்பர்களிடம் ஒளிவுமறைவு இருக்கக் கூடாதுஎன்பது எனது கொள்கை.
பரிசு பெற்ற அவரது நூல் 'வெள்ளி விரல்'.
தீரன் ஆர். எம். நௌஸாத்.
***************************
பிறப்பு: செப்டம்பர் 5, 1960.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞரும், சிறுகதை, புதின எழுத்தாளரும் ஆவார்.
'தீரன்' என்ற புனைபெயரிலும் எழுதுபவர்.
ஆர்.எம்.நௌஸாத் சாய்ந்தமருது ஊரில் பிறந்தவர்.
அஞ்சல் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
1978 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவர் 'தூது'என்ற பெயரில் கவிதைச் சிற்றிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் எழுதிய நூல்கள்:
*வல்லமை தாராயோ.. (சிறுகதைத் தொகுதி, 2000)
*வெள்ளிவிரல் (சிறுகதைத் தொகுதி, 2011)
*தீரதம் (சிறுகதைத் தொகுதி. 2017.)
*பள்ளிமுனைக் கிராமத்தின் கதை (2003)
*வானவில்லே ஒரு கவிதை கேளு (2005)
*நட்டுமை (புதினம், 2009)
(இரண்டு பதிப்பு)
*கொல்வதெழுதுதல் 90 (புதினம், 2013)
( மூன்று பதிப்பு )
*வக்காத்துக் குளம்(குறுநாவல், 2016.)
பெற்ற பரிசுகளும் விருதுகளும்:
* நட்டுமை நாவல் காலச்சுவடு சுந்தரராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில் முதற் பரிசு பெற்றது.
*வக்காத்துக் குளம் நாவல் அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு குறு நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.
* வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதிக்கு 2011ல் இலங்கை அரசின் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் கிடைத்தன.
*' சாகும்தலம்' சிறுகதை எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது.
*'தாய்மொழி' சிறுகதை ஞானம் மாசிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.
தேசிய பத்திரிகைகளில் எழுதுவதைவிட
ஞானம், ஜீவநதி போன்ற சஞ்சிகைகளில் இவர் கூடுதலாக எழுதுகிறார்.
இவரது கதைகளில் எனக்கு பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று.
" ஒய்த்தா மாமா "
******************
ஞானம் ஓகஸ்ட் 2012. 147 வது இதழில்
பிரசுரமாகி. இவரது ' தீரதம் ' தொகுப்பில்
இடம்பெற்றுள்ள கதை.
இஸ்லாமிய மதச் சடங்கான
(சுன்னத் எனப்படும் விருத்தசேதனத்தை )
நிறைவேற்றி வைக்கும் ஒருவரைப் பற்றிய கதை.
*********
எனக்கு பத்து வயது இருக்கும் போது அது நடந்தது.
என ஆரம்பித்து.
அதன்பிறகு எனக்கு ஒய்த்தா மாமாக்களைக்
கண்டால் ஒரு பயமும் இல்லை.
*********
என்று முடியும் இக்கதையை இவரது
'தீரதம் ' தொகுப்பில் வாசிக்கமுடியும்.
இவரோடு தொடர்பு அறுந்த போதும்
இவர் படைப்புகளை இப்போதும் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
வாசகன் அப்பா நான்.!