தீராவெளி

Wednesday, July 26, 2017

அஷ்ரப் சிஹாப்தீன்


பல் துறை எழுத்தாளர் - தீரன் .ஆர்.எம். நௌஷாத்

-அஷ்ரப் சிஹாப்தீன்


யாத்ரா என்ற கவிதை இதழை வெளியிடுவது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்த பிறகு நான் கலந்தாலோசித்த முக்கியமான நபர்களில் ஒருவர் தீரன் ஆர்.எம். நௌஷாத் .

தீரன் .ஆர்.எம். நௌஷாத் வித்தியாசமாக எதையும் நோக்கும் தன்மை கொண்டவர் . அவரது கவிதைகளில் மட்டுமன்றி அவரது சிறுகதைகள் –கட்டுரைகள்-விமர்சனங்கள்- என்பவற்றிலும் நாம் அதை அவதானிக்கலாம். 1980களில் தமிழ் இலக்கியப் பரப்பில் தோன்றிய புதுக் கவிஞர்களில் குறி ப்பிட்டுச் சொல்லக் கூடியவராக இருந்தார். பரவலாக வெளிவந்த பல்வேறு படைப்பாளிகளின் ஆக்கங்களுக்குள் நவ்ஷாத்தை தனித்து நாம் தரிசிக்கலாம்
. மனம் விட்டுப் பேசி வாய் விட்டுச் சிரிக்கும் தன்மை கொண்டவரும் இயல்பில் அதீத நகைச்சுவை உணர்வு கொண்டவருமான இந்தப் படைப்பாளியின் படைப்புக்கள் காத்திரமும் தீவிரமும் உரத்துப் பேசும் பண்பும் கொண்டவை.

நௌஷாத் .இதுவரை நான்கு நூல்களை நம் பார்வைக்குத் தந்துள்ளார்.-

வல்லமை தாராயோ...? (சிறுகதைத் தொகுதி)
நட்டுமை –(நாவல்)
வெள்ளி விரல் (சிறுகதைத் தொகுதி)
கொல்வதெழுதுதல். –(நாவல்)


ஞானம் வாசகருக்கு இவர் ஒரு சிறுகதை ஆசிரியராகவே அறிமுகம் ஆனார். ஞானம் நடத்திய பல்வேறு ஞாபகார்த்த சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றதன் மூலம் ஒரு சிறந்த கதை சொல்லியாக அவர் வெளிப்பட்டார். எனினும் 2000 ஆண்டில் இவரது –வல்லமை தாராயோ..?- சிறுகதை தொகுதி வெளியானது. ஆயின் குறிப்பிட்டளவு பிரதிகளே அச்சிடப்பட்ட இத்தொகுதியில் இடம் பெற்றிருந்தவை யாவும் பரிசுகள் பெற்ற அவரது சிறுகதைகளே.


2011 இல் தமிழ்நாடு காலச்சுவடு வெளியீடாக வந்த அவரது –வெள்ளி விரல்- சிறுகதை தொகுதி அவரது படைப்புத் திறனைப் பறைசாற்றியது . அநநூல் அவ்வாண்டுக்கான இலங்கை அரசின் தேசிய அரச சாஹித்திய விருதையும் கிழக்குமாகான சாஹித்திய விருதையும் பெற்றுக் கொண்டது.. இவற்றிலுள்ள சில கதைகள் என்னை ஆச்சரியப்பட வைத்தன. கதை நகர்த்தும் பாணி மாத்திரமல்லாது அவர் சொல்ல எடுத்துக் கொண்ட செய்திகளும் எது குறித்துச் சொல்கிறாரோ அது குறித்த தகவல்களில் அவரது அறிவுப் பின்னணியும் வியக்க வைக்கின்றன.
இவரது பல கதைகள் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பல்வேறு பரி சில்களை பெற்றுள்ளன.

 2008இல் ஞானம் சஞ்சிகை நடத்திய புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் –தாய்மொழி –சிறுகதைக்கு முதற் பரிசு வென்றார். தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நடத்திய சுஜாதா நினைவுப் புனைகதைப் போட்டியில் இவரது –சாகும்தலம்-சிறுகதையும்- பேராதனை பலகலைக் கழகத்தின் தமிழ் சங்கம் நடத்திய போட்டியில் –நல்லதொரு துரோகம் – சிறுகதை தங்கப் பதக்கம் வென்றது. அரச ஊழியருக்கான சிறுகதைப் போட்டி மற்றும் பல இலக்கியப் போட்டிகளிலும் சுமார் 19 சிறுகதைகளுக்கு பல்வேறு பரிசுகள் இவருக்குக் கிடைத்துள்ளன.


இவரது கதைகள் பற்றி ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் பின்வருமாறு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது --- நௌஸாத்தின் சிறுகதைகளின் உயிரோட்டமான அம்சம் அவரது உரைநடை. அனுபவத்தைத் தொற்றவைப்பதற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்த –உணர்ச்சிக் கூறுகள் நிறைந்த - அதேவேளை சமூக யதார்த்தத்திலிருந்து விட்டகலாத நடைச்சிறப்பு அவருடையது. நௌஸாத் கதைசொல்லும் முறையில் ஒரு புதுமை இருக்கிறது. புதுப்புனல் ஊற்றின் குளிர்மைப் பிரவாகம் கொள்கிறது. அவருடைய சிறுகதைகளைப் படித்து முடித்ததும் அவைதரும் உணர்வுகள் படிப்பவர் மனதில் தொற்றி நிற்கின்றன...........


தவிரவும் தீரன் ஆர்.எம். நௌஷாத் ஒரு சிறந்த நாவலாசிரியரும் ஆவார். கிழக்கின் நாவல் தேக்கத்தை உடைத்து அதனை தமிழ்நாடு நோக்கிப் பாயவைத்த சிறப்பிற்குரிய இவரது –நட்டுமை- நாவல் 2009இல் காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமி பவள விழா நாவல் போட்டியில் முதற்பரிசு பெற்று வெளியாகி தமிழக – ஈழத்துப் படைப்பாளிகள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றது. இது தென்கிழக்குப் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறை சிறப்புமானி பட்டத்துக்காக ஆய்வு செய்யப்பட்டது. –ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 193௦ களில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நீர்ப் பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்சினையைப் பின்புலமாகக் கொண்டு முஸ்லிம் மக்களின் பண்பாடு வாழ்முறை சமய நம்பிக்கைகள் பள்ளிவாசல் கொடியேற்று விழா தீர்மானச் சடங்கு முதலானவற்றை அந்த மண்ணின் வாசத்தோடு நட்டுமை யதார்த்தமாகச் சித்தரிக்கின்றது ....என்று ராஜமார்த்தாண்டன் இந்நாவல் பற்றி விதந;துரைத்துள்ளார்.


மேலும் எம்.பௌசரின் முஸ்லிம்குரல் இதழில் வெளியான இவரது பள்ளிமுனைக் கிராமத்தின் கதையும் 2013இல்- கொல்வதெழுதுதல்-90-என்ற பெயரில் நாவலாக உருப்பெற்று காலச்சுவடு வெளியீடாக வந்தது.- இது அவ்வாண்டின் சாஹித்திய விருதின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவானது. மேலும் தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணையையும் பெற்றுக் கொண்டது. போர்க்கால இலக்கியத்தில் முஸ்லிம் மக்களின் வாழ்முறையில் திணிக்கப்பட்ட அவஸ்தைகள் அதற்கு பரிகாரமாக எழுந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் யதார்த்தம் என்பவற்றை திடமாகப் பதிவு செய்கிறது இந்நாவல் என விமர்சகர் எ.எம். ஜாபீர் பீ.ஏ சுட்டியுள்ளார்.


பொதுவாகவே இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகள் ஒரு சிறுபான்மைச் சமூகமாக அதன் இருப்பியல்வரலாறு குறித்து இலக்கியப் பதிவுகள் எழுதப்படவில்லை என்ற கவலை முஸ்லிம் சமூக ஆர்வலர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஓர் உறுத்தலான அம்சமாகவே இருந்து வருகிறது. அந்தக் கவலையை ஒரு சிறு அளவேனும் குறைக்கும் பணியை நௌஷாத்தின் கொல்வதெழுதல் நாவல் தீர்த்து வைத்திருக்கிறது என்பேன்.


2005 இல் ஈழநாதம் பத்திரிகையில் --வானவில்லே ஒரு கவிதை கேளு- என்ற இவரது குறுநாவல் தொடர்கதையாக வெளியாகியது.


கவிதை துறையைப் பொறுத்தமட்டில் இவரது அளிக்கைகள் ஏராளமாக உள்ளன.. இவர் கல்முனை புகவம் வெளியிட்ட தூது கவிதை சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்தவர்... மிகச் சிறிய வடிவில் தூது வெளிவந்த போதும் அது வெளியான காலகட்டத்தில் (1983---1989)கவனிப்புப் பெற்ற கவிதைச் சஞ்சிகையாக வளர்ந்து வருவோர் மத்தியில் பிரபலம் பெற்றிருந்தது மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பதினாறு இதழ்கள் வெளிவந்தன.

பின்னர் எல்லா சஞ்சிகைகளுக்கும் ஏற்படும் துயரம் அதற்கும் ஏற்பட்டது. இந்தச் சின்னஞ் சிறிய இதழ்தான் யாத்ரா என்ற ஒரு கவிதை சஞ்சிகையை கொண்டு வர வேண்டும் என்ற எண்னத்தை என் மனதில் ஊன்றியது. ஏராளமான கவிதைகளும் குறும்பாக்களும் இவர் எழுதியுள்ள போதிலும் இவரிடமிருந்து ஒரு கவிதை தொகுதி கிடைக்கவில்லை எனினும் இவரது சில கவிதைகள் தொகுக்கப்பட்டு –அபாயா என் கருப்பு வானம்-என்ற தலைப்பில் இந்தியா பிரதிலிபி அமைப்பினால் மின்னூலாக வந்துள்ளது.இதனை (http://www.pratilipi.com/theeran r-m-nawshad) என்னும் தளத்தில் காணலாம்


தீரன் ஆர்.எம். நவ்ஷாத் வானொலி நாடகத் துறையிலும் தன காத்திரமான பங்களிப்பை செய்துள்ளார். 1998 இல் தினக்குரல் பத்திரிகையும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் வானொலி நாடகப் போட்டியில் இவரது -காகித உறவுகள்- நாடகம் மூன்றாம் பரிசு பெற்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் இவரது சுமார் இருபது நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. சில நாடகங்களில் நானும் நடித்துள்ளேன். அவற்றில் ஒரு கிராமத்தின் கவிதை- நாடகம் சுமார் இருபத்தைந்து தடவை மறு ஒளிபரப்புச் செய்யப்படுள்ளது ...


இவை தவிர இலங்கையின் முதல் ஹைக்கூ சஞ்சிகையான-- புள்ளி --இதழின் துணை ஆசிரியராகவும்.... சாய்ந்தமருது அபாபீல்கள் அமைப்பின் வெளியீடான –இரண்டாவது பக்கம்- கவியிதழின் ஆலோசக ஆசிரியராகவும் – மற்றும் வாஷிங்டன் கனவு –கவிதை தொகுதியின் தொகுப்பாளராகவும் –இன்னாலில்லாஹி – (இனக்கலவர இலக்கிய ) தொகுப்பாசிரியராகவும் இருந்து பல முயற்சிகளை செய்துள்ளார்.


நௌஷாத் தொழில் ரீதியாக தபால் திணைக்களத்தில் ஒரு பொறுப்புத் தபாலதிபராக 31 வருடங்கள் கடமையாற்றி விட்டு அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார். கல்முனை ஸாஹிரா கல்லூரியின் இலக்கியப் பண்ணையில் உருவானவன் என்பதில் பெருமை கொள்ளும் இவர் தனக்கு தமிழ் கற்பித்த கொக்கூர்கிளான் கா.வை. இரத்தினசிங்கம் ஐயா – ஆரம்ப காலத்தில் தனக்கு களமமைத்து தந்த தினகரன் உதவி ஆசிரியர் உயர்மிகும் எம்.ஆர். சுப்பிரமணியம் ஐயா.- இலக்கியத் துறையில் புதிய சிந்தனைகளை தனக்குள் ஊன்றிய மர்ஹூம் பாவலர் பஷில் காரியப்பர் – தன் ஆத்மீக குருநாதர் சூபி சபூர் ஒலியுல்லாஹ் அவர்களையும் மற்றும் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களையும் என்றும் நன்றியுடன் நினைவிற் கொள்கிறார்.


சமகாலப் படைப்பாளிகள் என்று எடுத்துக் கொண்டாலும் கடந்த கால இளம் படைப்பாளி என்று எடுத்துக் கொண்டாலும் பட்டியலின் முன்னணியிலேயே அவர் இருந்து வந்திருக்கிறார் என்பதற்கு அவருடனான 20 வருட நட்பையும் இலக்கிய உரையாடல்களையும் அவரது படைப்புக்களையும் முன்னிறுத்தி என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
அவருடைய படைப்புத் திறமை அளவுக்கு அவர் பேசப்படாமல் போனதற்கான முக்கியமான காரணம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் படைப்புக்களைத் தவிர வேறு எந்த வழிகளையும் அவர் கையாளாததும் இன்னொரு காரணம் ஒரு குறிப்பிட்ட காலம் அவர் எழுதாமலே ஒதுங்கியிருந்ததும்தான்.

தொழில் ரீதியாக அவர் ஓய்வு பெற்ற பின்னர் இலக்கியத்தில் அவர் இயங்கிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் சந்தோசத்தைத் தருகிறது. எமக்குள் இருக்கும் நட்புக்கு அப்பால் நான் அவருடைய வாசகனாக இருப்பதுதான் அந்த மகிழ்ச்சிக்கான காரணமாகும்.
எந்த ஒரு இலக்கிய வட்டங்களினதும் “இஸம்”களினதும் பிடிகளுக்கும் இறுகிக் கொள்ளாமல் தனித்துவமாக வாழ்வதால் தனக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பினாலும் ஒரு விருதோ பொன்னாடையோ போர்த்தப்படவில்லை என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிற இவர் பற்றிய விரிவான தகவல்களை மின்வெளி என்ற இணைய தளத்தில் காணலாம் (http://theeran1959.blogspot.com/) அன்னாருக்கு நமது வாழ்த்துக்கள் ...





No comments:

Post a Comment