தீராவெளி

Monday, July 20, 2015

வாப்பாவும் உம்மாவும்

வானமான  வாப்பாவுக்கும் 
பூமியான உம்மாவுக்கும் 
சமர்ப்பணம் 

           


 

அல்ஹாஜ். இசட் .கே. ராசிக் காரியப்பர்  
                                                       16 -12-1933 --------------   22-12-2013                                                   

எம்.எஸ். ஹாஜறா
16-11-1939 ----------16-09-2013 
                                                               


 என் பெற்றோர் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க மனமின்றி ஒரே ஆண்டில் இரு மாத கால இடைவெளியில் காலம் சென்றனர். இந்தப் பிரிவு தந்த தாக்கத்திலிருந்து நான் விடுபட வெகு காலமாயிற்று. அவர்கள் உயிருடன் இருக்கும் போதே என் நட்டுமை நாவலை இருவருக்கும் மேற்கண்டவாறு சமர்ப்பணம் செய்திருந்தேன்.   இருவருமே தொடர்ச்சியான வாசிப்பாளர்களாக இருந்ததனால் எங்கள் வீடே ஒரு வாசகசாலையாக இருந்தது... அது ஒரு பொற்காலம்.

அறிவியல் நகைச்சுவை மிக்க வாப்பா ..எந்நேரமும் வாயில் புகையிலையும் புத்தகமுமாக உம்மா ...அவர்களுக்குள் ஒரு சின்ன சண்டை மனவருத்தம் ஏற்பட்டு நாங்கள் கண்டதில்லை.. தம் நான்கு பிள்ளைகளையும் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றி வளர்த்த அந்தக் கருணைக்கு எப்படி நன்றி செலுத்த...?

வானமாக இருந்து - எம்மை வார்த்தெடுத்தீர்- வாப்பா ..நீங்கள் எங்கள் வம்சத்தின் விடிவிளக்கு .....
என்றும்

காலடியில் ஒரு சொர்க்கத்தை வைத்துக் கொண்டு இன்னுமோர் சொர்க்கம் தேடி ஏன் போனாய் உம்மா ...?  என்றும்

நாம்  நால்வர் இருக்கு மட்டும்  ம்மா.. வாப்பா  உங்களிருவரின்  நினைவிடை தோய்வோம்- விழி நீரினால் நினைப்போம்.. 

என்றும்  ஆறுதல் பெற்று அவர்தம் ஆத்மாக்களை அல்லாஹ்விடம் ஒப்புக் கொடுத்தோம். நல்லருள் பாலிக்க...


சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் 
 இருவரினதும் அடக்கஸ்தலங்கள் அருகருகே. --
(ஆடியிருந்ததும் அருகருகே அடங்கி முடிந்ததும் அருகருகே.)
                                                    000
        


தந்தையாரைப் பற்றி நவமணி பேப்பரில் வெளியான கட்டுரை.


மர்ஹ_ம் அல்ஹாஜ் 
இசட்.கே. றாசிக் காரியப்பர் ஜே.பி. 
சடுதி மரண விசாரணை அதிகாரி-
 பிறப்பு இறப்பு பதிவாளர்.



கலாபூஷணம். எம்.எம். ஆதம்பாவா.
சாய்ந்தமருது.8



அறிவொளி வீசும் மலர்ந்த முகம் அனைவரையும் அரவணைக்கவல்ல குளிர்ந்த பார்வை  அர்ப்பணிப்புடன் காரியமாற்றல் சமுக சேவை மனப்பாங்கு  தாராள குணம் விடாமுயற்சி கூர்மையான கவனம் அறிவாற்றல்  ஆகிய அருங்குணங்களும் பண்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற  ஓய்வுபெற்ற சடுதி மரணவிசாரணை அதிகாரியும் முன்னைநாள் சாய்ந்தமருது பிறப்பு இறப்பு பதிவாளருமான அல்ஹாஜ் இசட்.கே. றாசிக் காரியப்பர் ஜே.பி. தனது 83வது வயதில்  22.12.2013ல் காலமானார்கள். இன்னாஇலைஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

மர்ஹ_ம் அல்ஹாஜ் இசட்.கே. றாசிக் காரியப்பர் ஜே.பி. அவர்கள் முன்னாள் தகவல் ஒலிபரப்பு அமைச்சரும் கல்முனைத் தொகுதியின் முதல் பாராளுமன்ற உறுப்பினருமான புகழ்பெற்ற கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரின்  மூத்த சகோதரரான கிழக்கின் முதல் முஸ்லிம் புரக்டர் செயின் காரியப்பரினதும்   நிந்தவூர் நிலச் சுவாந்தர் செல்லப்பிள்ளை உடையாரின் புத்திரி லைலத்துல் கத்ரிய்யாவினதும் ஏக புதல்வராக நிந்தவூரில் 16.12.1933ல் பிறந்தார். 

தனது ஆரம்பக் கல்வியை  மட்- சிவானந்தாக் கல்லூரியிலும்.ää இடைநிலைக் கல்வியை கொழும்பு ஆனந்தாக் கல்லூரியிலும் ஆங்கில மொழி மூலம் கற்றுத் தேறினார்.

சாய்ந்தமருதின் பிரபல வர்த்தகரான முகம்மது சதக்கு ஸபிய்யா உம்மா தம்பதிகளின் புத்திரியான  ஹாஜியானி ஹாஜரா உம்மாவை 1955 ல் திருமணம் செய்தார்.  

பாரம்பரிய விவசாயப் போடியார்ப் பரம்பரையினராதலினால் 1962 களில் சாய்ந்தமருது நெற்சந்தைப்படுத்தும் களஞ்சியத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு மிகச் சிறப்பாகக் கடமை செய்தார். 1968களில் சாய்ந்தமருது அல் கமறுன் வித்தியாலயத்தின் பெற்றார் ஆசிரியர் சங்கச் செயலாளராகவும் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டு இப்பாடசாலைகளின் வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றினார். 

அன்னாரது ஆங்கிலப் புலமை காரணமாக 1970 .லிருந்து கரைவாகுப் பற்று தெற்கு பதில்  பிறப்பு இறப்பு பதிவாளராக தெரிவு செய்யப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார். 

இக்காலத்தில் தம்மிடம் குழந்தையின் பிறப்பு பதிவு செய்ய வரும் பாமர மக்களின் குழந்தைகளுக்கு அழகான இஸ்லாமிய அர்த்தம் பொதிந்த பெயர்களைச் சூட்டி அவர்களை மகிழ்வி;பபார். 

சாய்ந்தமருதில் 1972 இலிருந்து மிக நீண்ட  41 வருட காலம் அகில இலங்கை சமாதான நீதவானாக ஊருக்கு அரும்பணி ஆற்றிய பெருமையும் இவரையே சாரும்.. ஜே.பி என்றாலே இவர்தான் என்று அனைவருக்கும் தெரியும். 

கண்டிய அரசின் வெல்லஸ்ஸ கொட்டபோவே காரியப்பர் பரம்பரையின் வழியான அகமதுலெவ்வைக் காரியப்பரின் நேரடி வாரிசான இவர் மும்மொழி ஆற்றல் உடையவர். சரித்திரப் பிரசித்த இடங்களைப் புகைப்படம் பிடித்துச் சேகரிப்பதில் ஆர்வலராக் இருந்தார். இவரிடமிருந்த ஆயிரக்கணக்கான  கறுப்புவெள்ளைப் புகைப்படங்களும் தகவல் நறுக்குகளும் 1978ன் சூறாவளி அனர்த்தத்தில் தொலைந்து போயின. எனினும் எஞ்சியவற்றை பாதுகாத்து வைத்துள்ளார். 

மனிதர்களை அரவணைத்து அனைவருடனும் அன்புடன் பழகுதலையும்ää; தன்னலம் கருதா ஊர்ப் பொதுச் சேவையையும் கௌரவித்து 1979ல் சாய்ந்தமருது முதலாம் பிரிவு  முன்னேற்றச் சங்கம் அன்னாருக்கு ~~மனித நேய மாமணி| என்னும் பட்டயமளித்துப் பாராட்டப்பட்டார். கல்முனை அரசியற் களத்தில்;ää கேற்முதலியார் காரியப்பரினதும்ää ஏ.எம். சம்சுதீன் பா.உ. அவர்களினதும் அரசியல் வெற்றிகளின் பின்புலச் செயற்பாட்டாளராக விளங்கினார். 

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  வைத்திய கலாநிதி ஸஹிலா டொக்டர்ää முகம்மது நௌஸாத் (அஞ்சல் அதிபர்.)ää முகம்மது அஸ்மி (எம்.ஏ) அகமது றிபாய் காரியப்பர் (விரிவுரையாளர்.) ஆகியோரின் அருமைத் தந்தையாரான  அல்ஹாஜ் இசட்.கே. றாசிக் காரியப்பர் ஜே.பி. ஆவர்களின்  அரிய சேவைகளை பொருந்தி வல்ல நாயன்  அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸாகிய சொர்க்கத்தை வழங்குவானாக... ஆமீன்.! 00