தீராவெளி

Tuesday, October 29, 2019

சப்ரி - ஏறாவூர்



ஏறாவூர் வாசிப்பு வட்டம் 





                                                        Mohamed Sabry 
ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் 28 வது அமர்வு கடந்த 18/10/2019 அன்று மாலை 6.30 மணிக்கு ஏறாவூர் வாவிக்கரைப்பூங்காவில் ஆற்றோரமாக இடம்பெற்றது. இவ்வமர்வில் இரண்டு சிறுகதைத்தொகுதிகள் மற்றும் இரண்டு நாவல்கள் உரையாடலுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இவ்வமர்வை நண்பர் றியாஸ் தாவூத் நெறிப்படுத்தினார்.
கோமகனின் "முரண்" சிறுகதைத் தொகுதி தொடர்பாக நண்பர் பர்ஸான் ஆழமான தனது பார்வையை தெளிவுபடுத்தினார். சிறுகதைகளில் நிகழும் வழமைகளை கொஞ்சம் மாற்றியதாக அமைந்துள்ள இக்கதைகளில் மூன்று கதைகள் கவனத்துக்குட்படுத்தும் வகையில் சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் ஏனைய கதைகளில் காணப்படும் சில விடயங்கள் தொடர்பில் மாற்றுக்கருத்துக்களையும் நண்பர் பர்ஸான் முன்வைக்கத் தவறவில்லை.
சாத்திரியின் "ஆயுத எழுத்து" தொடர்பாக நண்பர் பிரசன்னா தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். ஈழத்துப் பரப்பில் ஆயுத எழுத்துக்கு பல எதிர்ப்புக்கள் வந்தபோதிலும் அதனை இன்று பேசுவதற்கான சூழல் உருவாகியிருப்பது பெரும் மகிழ்வென்றும், புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல விடயங்களை குறிப்பிட்டுக் கூறினார். தஙகள் கொள்கைகளை அடையும்பொருட்டு எந்த வக்கிரத்தனங்களையும் முன்னெடுக்கத் தயாராக இருக்கும் போராட்ட இயக்கங்கள் தொடர்பாக புத்தகத்தை முன்வைத்து பேசினார். சில இடங்களில் நாவலுக்கான அம்சங்கள் இல்லாதிருந்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத படைப்பு என்பதையும் குறிப்பிடத்தவறவில்லை. அதனைத் தொடர்ந்து வாசகர்களின் பெறுமதியான கருத்துக்களும் பகிரப்பட்டன. ஏறாவூர் வாசிப்பு வட்டத்தைச் சேர்ந்த பலர் ஆயுத எழுத்தை வாசித்திருந்ததனால் பல வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டது ஆரோக்கியமானதாக இருந்தது.
ஜிஃப்ரி ஹாசனின் "போர்க்குணம் கொண்ட ஆடுகள்" சிறுகதைத் தொகுப்பு தொடர்பாக நண்பர் திலிப்குமார் பேசியிருந்தார். ஜிஃப்ரி ஹாசன் தனது புத்தகம் தொடர்பாக இதுவரை வெளிவந்த எல்லா விமர்சனங்களையும் விட திலிப்குமாரின் பார்வை தன்னை வெகுவாகப் பாதித்திருந்தாக குறிப்பிட்டார். அன்றாட வாழ்வில் நடக்கும் சிக்கல்களையும் போராட்டங்களையும் அழகிய மொழிநடையிலும் இயற்கையுடனும் சேர்ந்து பயணிக்கும் வகையில் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ள கதைகளின் தன்மைகள் தொடர்பான ஆழமான பார்வையை திலிப்குமார் முன்வைத்திருந்தார்.
தீரன் ஆர்.எம்.நெளஸாத்தின் "கொல்வதெழுதுதல் 90" தொடர்பாக நண்பர் ரமீஸ் தனது கருத்துக்களை முன்வைத்தார். நெளஸாத் இங்கு நன்கு அறியப்பட்டவர். அவரது எல்லா படைப்புகளும் பெரும்பாலானவர்கள் வாசித்துள்ளார்கள். நாவல் தொடர்பான முக்கியமான சில கருத்துக்களை முன்வைத்ததுடன் நெளஸாத்தின் படைப்புகளை தனி அமர்வின் மூலம் உரையாடுவதே பொருத்தம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மிகச் சிறப்பான முறையில் இவ்வமர்வு நடந்தேறியது. தலைமை வகித்த எஸ்.எல்.எம்.ஹனீபா அமர்வை கலகலப்பாக வைத்திருந்தார். வாசிப்பு வட்டத்தின் சிறிய புத்தகக்கூடமும் அமைக்கப்பட்டிருந்தது. கலந்துகொண்டவர்களுக்கு சமுசாவும் இஞ்சி பிளேண்டியும் வழங்கியிருந்தோம். பெருமளவிலானவர்கள் கலந்துகொண்டிருந்ததும், கருத்துத் தெரிவித்ததும் மகிழ்வாக இருந்தது. கல்குடா காத்தான்குடியிலிருந்து வருகைதந்த அன்பர்களுக்கும் ஏனையவர்களுக்கும் மற்றும் இடத்தை வழங்கிய ஏறாவூர் நகரசபைக்கும் நன்றிகள்.
இவ்வமர்வை சாத்தியப்படுத்திய நண்பர்களான Mohamed Sarees Issadeen Ramees Abdul Salam Jemsith Raafi Akber Hassan என்றும் அன்புக்குரியவர்கள்.
ஸப்றி

அன்புடீன் பொன்விழா மலர்



அன்புடீன் பொன்விழா மலர் 









மானா மக்கீன்