படிப்பும் பாதிப்பும் - 17
கபடப்பறவைகள்
அலெக்ஸ் பரந்தாமன்
சமூகத்தில் கலையுணர்வோடு கூடிய குடும்ப உறுப்பினர்கள் வாழும் இடத்தில் ஒரு படைப்பாளி தானாக உருவாக்கம்பெறும்போது, அவனுக்கு அனுசரணைகள், ஊக்குவிப்புகள் கிடைக்கின்றன. நல்ல வழிகாட்டுதல்களும் ஏற்படுகின்றன.
இதன்நிமித்தம் அவன் விட்டுச்செல்லும் நினைவுகளும் படைப்புகளும் கலையை உணர்ந்தவர்களால் பாதுகாக்கப்படுகின்றன ; போற்றவும்படுகின்றன.
ஆனால், எந்தவொரு ஆதரவுமற்று ஊக்கப்படுத்தல்களுமற்று, தானே சுயமாக உருவாக்கம்பெறும் படைப்பாளன், இறுதியில் இங்கே விட்டுச் செல்வதென்ன? அதுவும், 'இலக்கிய வாசனை' அற்ற குடும்பதிலுள்ள ஒருவன், படைப்பாளியாகி... அவன் இறந்தபின் பேசப்படுகிறானா? அவனது படைப்புகள், பரிசுகள்... என்னவாகின்றன? என்பதை வெளிப்படுத்துகிறது ஆர். எம். நெளஸாத் அவர்கள் எழுதிய 'கபடப்பறவைகள்' எனும் சிறுகதை!
எழுத்து இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்... சகிதம் கொண்ட ஒரு படைப்பாளியானவன், இறந்து... நாற்பதாவதுநாள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து ஆவியாக எழுந்து, எவர் கண்களுக்கும் புலப்படாமல் தனது வீட்டிற்குவருகிறான்.அதன்பின்பு - அந்தவீட்டில் நடக்கும் நிகழ்வுகளை நெள ஸாத் அவர்கள் தனக்கேயுரிய நகைச்சுவைப் பாங்கோடுநகர்த்திச் செல்கிறார்.
''மரணவீடுதான்... ஆனால், வீடு நல்ல கலகலப்பாகக் காணப்பட்டது...'' என அவர் எழுதிச் செல்கையில், இந்தச்சமூக அசிங்கத்தின் ஒருபகுதி அம்மணமாகத் தெரிகிறது.இறந்துபோன அந்த எழுத்தாளன் உயிரோடு இருக்கும் போது தேடிவைத்த 'பொக்கிஷங்களை' ( நூல்கள், விருதுகள், பாராட்டுப்பத்திரங்கள்) காசுபணமென நினைத்து அவனது உறவுகள் அலுமாரிகளைத் குடைந்து ஏமாற்றமடைவதும், அவனது பொக்கிஷங்கள் விற்பனைக்குச் செல்வ தும், அதிலும் படைப்பாளனின் சிறுவயதுப் பேரனொருவன்அங்கு எஞ்சியிருந்த ஒரு' கபடப்பறவை' நூலின்மேல் தனதுசலத்தை அடித்து மலமும் கழிப்பது கதைக்கான இறுதி உச்சம்.அங்கே ஆவியாக நிற்கும் படைப்பாளன், தனது படைப்பு களுக்கு ஏற்பட்ட அநீதி கண்டு சகிக்க முடியாமல், அவன் மீண்டும் தன்னைப் புதைக்கப்பட்ட இடத்துக்கே போய் சேருவதோடு... கதை முடிகிறது.
சிரிக்கவும்... சிந்திக்கவும் வைக்கிறது 'கபடப்பறவைகள்'
●
- அலெக்ஸ்பரந்தாமன்,
புதுக்குடியிருப்பு.
No comments:
Post a Comment