Shathir Ahamed is with R.M. Nowsaath.
மொழி வழி கூடுகை 2022
வனம்- ஆதிரை
விருந்தினர் - 03 தீரன் நௌஷாத்
தீரன் ஆர். எம். நௌஷாத் கிழக்கின் நிலவியல் குறித்து மிக நேர்த்தியான கதைகளை வாசிப்புலகிற்கு தந்தவர். தனக்கான கதை மொழியினை வடிவமைத்ததிலும், மண்வாசனைச் சொற்களில் பிரத்தியேக கவனத்தினைச் செலுத்தியதும் தீரனின் தனித்த அடையாளமாக இலக்கியப் பரப்பில் விசாலமாகியது. தீரனின் கதைகள் முழுக்க உலாவித்திரிந்த மாந்தர்கள் வாசகர்களிடம் மிக அண்டிய உறவினை பேணிக் கொண்டார்கள். தீரனின் கதைகளைப் போல கவிதைகளும் மேம்பட்ட அரசியலினை கொண்டியங்கியது.
‘நட்டுமை’, ‘கொல்வதெழுதுதல் 90’ இவரது நாவல்கள். ‘வெள்ளி விரல்’, ‘தீரதம்’, ‘வக்காத்துக் குளம்’ ஆகியவை சிறுகதை தொகுப்புகள்.
நட்டுமை நாவலானது காலச்சுவடு அறக்கட்டளையின் 'சுந்தர ராமசாமி -75 ‘ இலக்கியப் போட்டியில் முதலிடம் பெற்றது. வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி 2011ல் தேசிய அரச சாகித்திய விருது பெற்றது. ‘கொல்வதெழுதுதல் 90’ காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது. 2017ல் அக்கினிக்குஞ்சு இணையம் நடாத்திய எஸ்.பொன்னுத்துரை நினைவு நாவல் போட்டியில் இவரின் ‘வக்காத்துக்குளம்’ குறுநாவல் மூன்றாம் இடத்தைப் பெற்றது. தினக்குரல் நாளிதழும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ‘காகித உறவுகள்’ எனும் வானொலி நாடகம் மூன்றாம் பரிசு பெற்றது.
‘நல்லதொரு துரோகம்’ என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்கம் முதற்பரிசாக தங்கப்பதக்கம் அளித்தது. ‘சாகும்-தலம்’ சிறுகதை எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது. ஞானம் சஞ்சிகை நடத்திய புலோலியுர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘தாய் மொழி’ சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்தது.
"தானே பின்னிக்கொண்ட உலக வலைப்பின்னலில் தானே சிக்கிக் கொண்ட மனிதச் சிலந்திகளுக்கு, சில காலங்களின் பின்னர், இதனைவிட்டும் விடுதலையாகித் தம் ஆரம்பம் நோக்கிய எத்தனம் அடிமன ஏக்கமாக உறைகிறது. அது, தொடர்ந்து விஸ்வரூபமெடுத்து, தொடரான பின்னிணைவாக மனதில் ஆக்கிரமிக்கிறது" என்பார் தீரன். அவரது படைப்புக்களும் உரையாடலும் நினைவுகளின் வழியே ஒழுகும் நீர்ச்சுனைகளுக்கு சமாந்தரமானது.
நட்டுமை நாவலை வாசிக்க:-
வக்காத்துக்குளம் குறுநாவல் மற்றும் ‘கொல்வதெழுதுதல் 90’ வாங்க:-
தீரன் நேர்காணல்:
No comments:
Post a Comment