தீராவெளி

Tuesday, March 2, 2021

ஏ.பீர்முகம்மது சேர்



ஆர்.எம். நௌஷாத்தின் இரு நாவல்கள்...

ஏ.பீர்முகம்மது
➖➖➖➖➖➖➖➖➖➖➖

நட்டுமை என்ற நாவலை எழுதியதன் மூலம் தீரன் ஆர்.எம் நௌசாத் தமிழ் இலக்கிய வெளியில் சிலாகித்துப் பேசப்பட்டவர்.அவரது இரண்டு நாவல்கள் தொடர்பில் எழுதும் எத்தனமே இக்கட்டுரையின் மையமாகும். இதன் தொடக்கப் புள்ளியாக இலங்கையின் தமிழ் நாவல் படைப்பு முயற்சியில் முஸ்லிம்களின் வகிபாகம் பற்றிய தேடலைத் தொடங்கியபோது பின்வரும் மூன்று விடயங்கள் கவனத்திற்கு வந்தன.

அ) இலங்கையில் வெளியான முதல் தமிழ் நாவல் (அசன்பே சரித்திரம்)

ஆ) மாப்பிள்ளைலெப்பை ஆலிம் அவர்கள் அறபுத் தமிழில் எழுதிய இன்னொரு நாவல் ( மதீனத்துன் நுஹாஸ்) ¸

இ) அசன்பே சரித்திரம் வெளியாகி நீண்டகால இடைவெளியின் பின்னர் முஸ்லிம் சமூகத்திடமிருந்து வெளியான பிறிதொரு தமிழ் நாவல் (இவளைப் பார்)

மேற்படி மூன்று விடயங்களையும் நோக்குவோம்

இலங்கையின் முதல் தமிழ் நாவல் என்ற பெருமையை அசன்பே நாவல் பெறுகின்றது. இதன் நான்காவது பதிப்பு 1990 இல் கொழும்பில் வெளிவந்தது. வாசகர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கென விசேட அறிவுரைகளை இந்நாவல் கொண்டிருந்தது.

இந்நாவல்பற்றி இங்கு பலரும் பேச வாய்ப்புள்ளதால் தொடர்ந்து பேசவில்லை.

இரண்டாவது விடயம் அறபுத் தமிழ் நாவல் பற்றியது.

மாப்பிள்ளைலெப்பை ஆலிம் அவர்கள் தமிழ் நாடு காயல்பட்டணத்தைச் சேர்ந்தவர் ஆயினும். பல வருடகாலம் இலங்கையோடு தொடர்புகளைக் கொண்டு வாழ்ந்தவர். அசன்பே சரித்திரம் எழுதிய எம்.சி.சித்திலெப்பை முஸ்லிம் சமூகத்தின் கல்விஇ கலாசாரஇ பண்பாடு விடயங்களிலும் சமூக சீர்திருத்தப் பணியிலும் தீவிரமாக ஈடுபட்ட அதே காலகட்டத்தில் மாப்பிள்ளைலெப்பை ஆலிம் இலங்கையில் அறிவியல் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தப் பாடுபட்டவர். அவர் அறபுத் தமிழில் எழுதியதே மதீனத்துன் நுஹாஸ் என்னும் நாவலாகும். கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவிலிருந்த சுலைமானியா அச்சகத்தில் பிரசுரிக்கப்பட்டு 1900 ஆம் ஆண்டு செய்யித் முகம்மது ஆலிம் என்பவரால் வெளியிடப்பட்டது. பிற்காலத்தில் இதன் தமிழாக்கம் தாமிரப்பட்டினம் என்ற பெயரில் முள்ளிக்குளம் எம்.கே.ஈ.மௌலானா என்பவரால் சென்னையில் 1979 இல் வெளியீடு செய்யப்பட்டது.

அறபுத் தமிழ் என்பது தமிழை அறபு லிபியில் (எழுத்தில்) எழுதுவதாகும். அறபுத் தமிழ் பற்றி பேரா. கா.சிவத்தம்பி அவர்கள் "அறபுத் தமிழ் ஆக்கங்கள் என்பன அறபு லிபியில் வரி வடிவத்தில் எழுதப்பெற்ற தமிழ் ஆக்கங்களே ஆகும்" என்று கூறியுள்ளார்1 அறபு மொழி வாசிக்கத் தெரிந்த ஒருவர் இந்நாவலைப் படிக்கும்போது தமிழ் நாவலொன்றை வாசிக்கும் உணர்வினையே பெறுவார். குறிப்பிட்ட அறபுத் தமிழ் நாவலும் அசன்பே சரித்திரமும் இலங்கையில் சமகால சு10ழலில் ஐந்து வருட இடைவெளியில் வெளிவந்தன என்பதையும் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை நாவல் வடிவில் விதைக்க முடியும் என்ற கற்பிதத்தை அக்கால கட்டம் கொண்டிருந்தது என்பதையும் மட்டுமே இங்கு சொல்லத் துணிந்தேன். மாறாக குறிப்பிட்ட அறபுத் தமிழ் நாவலை தமிழ் நாவல் வரிசைக்குள் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கம் இங்கில்லை.

மூன்றாவது விடயம் இவளைப் பார் என்ற நாவலாகும்.இது சித்திலெப்பையைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்திடம் இருந்து வந்த இரண்டாவது நாவலாகும்.எம்.ஏ. அப்பாஸ் எழுதிய இந்நாவல் 1953 இல் வெளியானது.

சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பேசவல்லது நாவல் வடிவம் என்ற நிலைப்பாடு இருந்த சு10ழ்நிலையில் இன்னுமொரு நாவலை எழுத அறுபது வருடங்களிலும் கூடிய கால இடைவெளியை முஸ்லிம்கள் ஏன் பெற்றுக் கொண்டார்கள் என்ற கேள்வியை இவளைப் பார் என்ற நாவல் எழுப்புகின்றது. பல்கலைக்கழகங்களும் ஆய்வாளர்களுமே பதில் தர வேண்டியுள்ளது.

என்னுடைய வாசிப்பு எல்லைக்குள் (மொழிபெயர்ப்பு நாவல் தவிர்த்து) எம்.சி. சித்திலெப்பை எம்.ஏ.அப்பாஸ் இளங்கீரன் என்று நீளும் முஸ்லிம் நாவலாசிரியர்கள் வரிசையில் தீரன் ஆர்.எம்.நௌசாத் 17 வது இடத்தில் வருகிறார்.

அவர் எழுதிய முதலாவது நாவல் நட்டுமை ஆகும். காலச்சுவடு அறக்கட்டளையின் சுந்தர ராமசாமி பவளவிழா ஞாபகார்த்த இலக்கியப்போட்டியில் முதல் பரிவு பெற்ற நாவல் ஆகும்;. கொல்வதெழுதுதல்90 அவரின் இன்னுமொரு நாவலாகும். வானவில்லே ஒரு கவிதை கேளு¸ நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ஆகிய இரண்டு நாவல்களை பத்திரிகைகளில் தொடராக எழுதியுள்ளார். அக்கினிக்குஞ்சு நடத்திய போட்டியில் வக்காளத்துக் குளம் என்ற குறுநாவல் மூன்றாம் பரிசு பெற்றது. வல்லமை தாராயோ¸வெள்ளி விரல் என்பன அவரின் சிறுகதைத் தொகுதிகளாகும். வெள்ளி விரல் இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றதோடு கிழக்கு மாகாண சாகித்திய விருதினையும் வென்ற தொகுதியாகும்....00

00

ஏ.பீர்முகம்மது

No comments:

Post a Comment